டாடா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் இவ்ளோ சீக்கிரம் அறிமுகமாக போகுதா! சூப்பரான தகவல்!
டாடா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா டியாகோ. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதனை உலக எலெக்ட்ரிக் வாகன தினத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, இந்திய வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்வதற்கு என்ன காரணம்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது புரிகிறது. இதுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணம்.

தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம். இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் 85 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் டிகோர் எலெக்ட்ரிக் மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் ஆகிய எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெரிய பேட்டரி தொகுப்புடன், நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை நெக்ஸான் இவி மேக்ஸ் என்ற பெயரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் 'கிங்'-ஆக மாற்றியுள்ளன.

இந்த வரிசையில் வரவுள்ள டியாகோ எலெக்ட்ரிக் காரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது என்பது நமக்கு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தெரியவந்து விட்டது. ஆனால் வாடிக்கையாளர்களின் மனதில் தற்போது மிகப்பெரிய கேள்வி ஒன்று எழுந்துள்ளது.

டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரப்போகிறது? என்பதுதான் அது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் அனேகமாக நடப்பு செப்டம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த அக்டோபர் மாதத்திலோ பொது பார்வைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதை தொடர்ந்து வெகு விரைவிலேயே டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் முறைப்படி விற்பனைக்கும் கொண்டு வரப்படலாம்.

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே பேட்டரி தொகுப்புதான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் 26kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 306 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் பேட்டரி மற்றும் ரேஞ்ச் அம்சங்களும் இதே அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டியாகோ எலெக்ட்ரிக் கார் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. வரும் நாட்கள் அல்லது வாரங்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் நமக்கு கிடைக்கலாம். அதனை தெரிந்து கொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








