முன்னாடியே புக்கிங் பண்ணாம விட்டுட்டோமே... ஏக்கத்தை ஏற்படுத்திய டாடாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு, டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.
முன்னதாக டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV) என 2 எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் மூன்றாவதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் குறைவு. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 8.49 லட்ச ரூபாய் மட்டுமே.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 11.79 லட்ச ரூபாய் ஆகும். இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களிலேயே மிகவும் விலை குறைவான மாடல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இதன் காரணமாக டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. இந்த சூழலில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் விலைகள் அதிரடியாக உயரவுள்ளன.
சுமார் 4 சதவீதம் வரை விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 35 ஆயிரம் ரூபாய் வரை விலை உயரலாம். இந்த புதிய விலை உயர்வானது, வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை 19.2 kWh மற்றும் 24 kWh பேட்டரிகள் ஆகும். இதில், 19.2 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 250 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 24 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 315 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான ஓட்டுனர் இருக்கை ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
விலைகள் அறிவிக்கப்பட்டு விட்டாலும் கூட, இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. டியாகோ எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி வழங்கும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் ஜனவரி மாதத்தில் இருந்துதான் தொடங்கவுள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் டெலிவரி வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளதால், அதனை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு செய்ய காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மன நிறைவான தயாரிப்பாக இருப்பதால், தொடர்ந்து முன்பதிவுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டதால், டெலிவரி தொடங்கப்பட்ட பின், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது பெறலாம்.
நடப்பாண்டு டியாகோ எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த நிலையில், வரும் 2023ம் ஆண்டு 2 புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் (Tata Altroz EV) மற்றும் டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV) ஆகும். இதன் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் எந்த நிறுவனத்தாலும் எட்ட முடியாத உயரத்தை டாடா மோட்டார்ஸ் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








