நேத்துதான் களமிறக்கினாங்க, அதுக்குள்ள போட்டியா!.. மாருதிய கதறவிட டாடா களமிறக்கிய புதிய கார்!

டாடா டியாகோ என்ஆர்ஜி சிஎன்ஜி தேர்வு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அண்மையில் டியாகோ என்ஆர்ஜியின் சிஎன்ஜி (Tiago NRG CNG) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அக்கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

டியாகோ

ஃபேக்டரியிலேயே சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட வாகனமாக இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 7.40 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது சிஎன்ஜி வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் சிஎன்ஜி வாகனங்களை களமிறக்குவதில் பலமடங்கு போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது.

நேற்றைய தினம் (நவம்பர் 18) மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஆல்டோ கே10 சிஎன்ஜி காரை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இதற்கு போட்டியா டாடா மோட்டார்ஸ் அதன் டியாகோ என்ஆர்ஜி சிஎன்ஜியை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது நிறுவனத்தின் மூன்றாவது சிஎன்ஜி வாகனம் ஆகும். ஏற்கனவே நிறுவனம் டியாகோவின் வழக்கமான வேரியண்டிலும், டிகோர் கார் மாடலிலும் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றின் வரிசையிலேயே தற்போது டியாகோ என்ஆர்ஜி சிஎன்ஜி இணைக்கப்பட்டுள்ளது. இது இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எக்ஸ்டி என்ஆர்ஜி மற்றும் எக்ஸ்இசட் என்ஆர்ஜி ஆகியவை அவை ஆகும். இதில், எக்ஸ்டி என்ஆர்ஜி சிஎன்ஜிக்கு ரூ. 7.40 லட்சமும், எக்ஸ்இசட் என்ஆர்ஜி சிஎன்ஜிக்கு ரூ. 7.80 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே தேர்வுகளை சிஎன்ஜி அல்லாத பெட்ரோலில் மட்டும் இயங்கும் மோட்டாருடன் வாங்க விரும்பினால் ரூ. 90 ஆயிரம் குறைவான விலையில் பெற்றுக் கொள்ளலாம். மோட்டாரை பொருத்த வரை 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த சிஎன்ஜி காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சிஎன்ஜி மோடில் இயங்கும்போது அதிகபட்சமாக 73.4 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இத்துடன் வழங்கப்படுகின்றது. சிஎன்ஜி-யை அதிகளவில் நிரப்பிக் கொள்ளும் விதமாக 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி சிலிண்டர் இக்காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெரிய உருளை காரின் பின்புறத்திலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், காரின் பூட் ஸ்பேஸ் கடுமையாகக் குறைந்துள்ளது.

இக்காரில் கூடுதல் சிறப்பம்சங்களாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெனட் க்ளஸ்டர், சாவியில்லாமல் நுழையும் வசதி, கூல்டு குளோவ் பாக்ஸ், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை, 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக்குகள், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்களும் டியாகோ என்ஆர்ஜியில் வழங்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்களை பெட்ரோல் டியாகோ என்ஆர்ஜியில் நம்மால் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடாவின் இந்த புதிய சிஎன்ஜி காரின் வருகை மாருதி சுஸுகி வேகன்-ஆர் சிஎன்ஜி மற்றும் செலிரியோ சிஎன்ஜி ஆகியவற்றிற்கு போட்டியாக அமைந்துள்ளது.

Most Read Articles
English summary
Tata tiago nrg cng launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X