டிகோர் மின்சாரகாரை 1ரூபாகூட செலவில்லாம பயன்படுத்தும் வடநாட்டவர்! இ-காரை ஃப்ரீயா யூஸ் பண்ண இப்படி ஒரு வழி உண்டா
பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து காக்க வந்த கடவுளாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பார்க்கப்படுகின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக வட மாநிலத்தைச் சேர்ந்த ஓர் நபர் தான் இதுவரை 12,500 கிமீ தூரத்தை எலெக்ட்ரிக் காரில் கடந்து இருப்பதாகவும், இந்த நீண்ட தூர பயணத்திற்காக தான் இதுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்தது இல்லை என்றும் ஆச்சரியமளிக்கும் தகவலை வெளியிட்டு உள்ளார்.
டாடா டிகோர் இவி பயன்பாட்டாளார் வெளியிட்டிருக்கும் இந்த தகவல் ஒட்டுமொத்த மின் வாகன பயன்பாட்டாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றது. அதேநேரத்தில், பல நூறு கேள்விகளையும் எழுப்பி உள்ளது. எப்படி இவரால் ஒரு ரூபாய்கூட செலவு செய்யாமல் 12,500 கிமீ தூரம் பயணிக்க முடிந்தது என்ற கேள்வியே அனைவரின் மிகப் பெரிய சந்தேகமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களில் குறைந்தபட்சம் ஒரு கிமீ பயணிக்க 60 பைசா முதல் ஒரு ரூபாயாவது செலவாகும்.

இப்படியாக இருக்க ஒத்த பைசா கூட செலவு செய்யாமல் பயணிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. ஆனால், இதையே டிகோர் இவி எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டாளார் செய்துக் காட்டியிருக்கின்றார். அவர் ஒவ்வொரு கி.மீட்டரையும்., இலவசமாகக் கடக்க சூரிய ஒளியையே பயன்படுத்தி இருக்கின்றார். ஆமாங்க, சோலார் பேனல் கொண்டே தனது காரை அவர் சார்ஜ் செய்து பயன்படுத்தி வந்திருக்கின்றார்.
இதுவரை ஒரு முறைகூட பணம் கொடுத்து சார்ஜ் நிலையங்களில் அவர் சார்ஜ் செய்ததில்லையாம். இதற்காக தனது வீட்டிலேயே 10 கிலோவாட் சோலார் பேனலை அவர் நிறுவியிருக்கின்றார். இதுவே அவரை இதுவரை சார்ஜ் மையம் செல்வதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. நாள்தோறும் 50 கிமீ முதல் 60 கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடியவராக டிகோர் இவி உரிமையாளர் இருக்கின்றார். அவ்வாறே இப்போதே 12 ஆயிரத்திற்கும் அதிகமான கிமீ தூரம் பயணத்தை அவர் கடந்திருக்கின்றார்.
குறிப்பாக, ஒரு முறைகூட ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தின் உதவியை நாடாமல் இந்த பயண தூரத்தை அவர் எட்டி இருக்கின்றார். ஒட்டுமொத்த பயணத்திற்கும் சோலார் பேனலை மட்டுமே அவர் பயன்படுத்தியிருக்கின்றார். கணிசமான தொகையை செலவு செய்ய தயார் என்றால் நம்மால் பெரும் தொகையை மின்சார வாகன பயன்பாட்டில் மிச்சப்படுத்த முடியும் என்பதற்கான சான்றாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. சோலார் பேனல் வாயிலாக தன்னுடைய எலெக்ட்ரிக் காருக்கு மட்டுமின்றி வீட்டிற்கு தேவையான மின்சாரத்தையும் பெற்றதாக டிகோர் இவி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஆகையால், எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டில் மட்டுமல்ல வீட்டின் மின்சார செலவிலும் அவரால் கணிசமாக மிச்சப்படுத்த முடிந்துள்ளது. டாடா மோட்டார்ஸின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக நெக்ஸான் இவி இருக்கின்றது. இருப்பினும், டிகோர் இவி-யை அவர் தேர்வு செய்திருக்கின்றார். இதற்கு இந்த காரின் சிறந்த ஏரோடைனமிக்ஸ் தோற்றமே மிக முக்கியமான காரணம் என அவர் தெரிவித்திருக்கின்றார். இதுமட்டுமின்றி, நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் 3 லட்ச ரூபாய் வரை குறைவான விலையில் டிகோர் இவி விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி ரூ. 12.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனை வழங்குவதற்காக டிகோர் இவி எலெக்ட்ரிக் காரில் 26 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதுமட்டுமின்றி கூடுதல் சிறப்பு வசதிகளாக மல்டி மோட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு வசதி, இசட் கன்னெக்ட் கார் இணைப்பு தொழில்நுட்பம், ஐ-டிபிஎம்எஸ் மற்றும் டயர் பிரஷ்ஷர் ரிப்பேர் கிட் உள்ளிட்ட அம்சங்களும் டிகோர் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, தானாக ஒளிரும் ஹெட்லேம்ப், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற நவீன கால அம்சங்கள் சிலவும் டிகோர் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய சூப்பரான வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காரையே மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபர் வாங்கிய நாள் முதல் ஒரு ரூபாய்கூட செலவு இல்லாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். டிகோர் இவி-யை வாங்கி ஒரு வருடத்திற்கும் குறைவான மாதங்களே ஆகுவதாக கூறப்படுகின்றது. இந்த காருக்கு முன்னதாக பெட்ரோல் வெர்ஷன் டிகோர் கார் மாடலையே அவர் பயன்படுத்தி வந்திருக்கின்றார். இதன் பயன்பாடு மிகவும் பிடித்துப் போகவே அடுத்ததாக டிகோர் இவி-க்கு அவர் மாறியதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








