எலெக்ட்ரிக் காருக்கு நீங்க செட் ஆகுவீங்களா, மாட்டீங்களா? எப்படி கண்டுபிடிப்பது?
உங்களுக்கான எலெக்ட்ரிக் காரை எப்படி தேர்வு செய்வது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இந்த தகவல் உங்களுக்கு எலெக்ட்ரிக் கார் செட் ஆகுமா, ஆகாதா என்பதை அறியவும் உதவும். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியர்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முன் வந்த வண்ணம் இருக்கின்றனர். கடந்த காலங்களில் நிலவி வந்த சார்ஜிங் நிலைய பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை தற்போது கணிசமாக களையப்பட்டு உள்ளது. இதன் விளைவாகவே மக்கள் பலர் மின் வாகனங்களை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இருப்பினும், ஒரு சிலர் தற்போதும் மின்சார வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டிய வண்ணம் இருக்கின்றனர். தங்களுக்கான மின்சார வாகனத்தை வாங்குவது எப்படி என்கிற சந்தேகம் அவர்களிடத்தில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த மாதிரியான நபர்களுக்கு உதவும் பொருட்டே இந்த பதிவை வெளியிட்டிருக்கின்றோம். அதாவது, நமக்கான எலெக்ட்ரிக் காரை எப்படி தேர்வு செய்வது, அது நமக்கு செட் ஆகமா, ஆகாதா என்பது பற்றிய தகவலையே இங்கு தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள்:
மின்சார வாகனத்தை வாங்க முடிவு செய்யும் முன் உங்கள் வீட்டுக்கு அருகில் மின்சார வாகனத்தைச் சார்ஜ் செய்வதற்கான அடிப்படை வசதிகள் இருக்கின்றதா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். மின்சார வாகனம் வாங்கும் முன் அறிந்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று இதுவாகும். சில வாகன உற்பத்தியாளர்கள் மின்சார வாகனங்களை வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.

குறைந்தபட்சம் இந்த வசதியையாவது உங்களால் அணுக முடியுமா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். முக்கிய நகரங்களில் வசிக்கும் பலர் தங்களுடைய வாகனத்தை ஓர் இடத்திலும், தங்கள் வசிக்கும் வீட்டை ஓர் இடத்தில் வைத்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர். உதாரணமாக, சென்னை சௌகார்பேட் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் வாகனத்தை ஓர் இடத்தில் விட்டுவிட்டே வீட்டிற்கு செல்கின்றனர்.

மிக சிறிய சிறிய தெருக்களால் ஆனதே இந்த பகுதி. இதுமாதிரியான மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கட்டாயம் சற்று யோசித்து மின்சார காரை வாங்குவது நல்லது. வீட்டில் வைத்து சார்ஜ் செய்ய முடியவில்லை என்றாலும், வீட்டுக்குள் அருகிலாவது சார்ஜிங் மையம் இருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டிலும் சிக்கல் இருக்கும் பட்சத்தில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்தவற்கான ஓர் வழியை ஏற்படுத்திவிட்டு பின்னர் வாங்குவது நல்லது. அதேவேலையில், மின்சார வாகனங்களைச் சார்ஜ் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்து பின்னர் மின்சார காரை வாங்கும் திட்டத்தை தீட்டுங்கள்.

ரேஞ்ஜ்:
மின்சார வாகனத்தில் கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான விஷயம், அதன் ரேஞ்ஜ் விபரம். நாம் வாங்க விரும்பும் எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வதும் கூடுதல் அவசியமானது. நாம் வெறும் நகரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்போகின்றோம் என்றால் குறைந்தளவு ரேஞ்ஜ் தரக் கூடிய மின்சார காரே போதுமானது.

அதுவே நகரத்தைத் தாண்டியும் நமது பயணங்கள் இருக்கும் என்றால் குறைவான ரேஞ்ஜை தரக் கூடிய மின்சார வாங்குவது என்பது பலனளிக்காத ஓர் செயலாகும். ஆனால், அதிகம் ரேஞ்ஜ் தரும் கார்களின் விலை பலமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாகனத்தின் வகை:
இந்தியாவில் எஸ்யூவி கார் பிரியர்கள் மிக அதிகம். ஆகையால், பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் எலெக்ட்ரிக் கார்களை எஸ்யூவி ரகத்திலேயே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில், டாடா மோட்டார்ஸ் மட்டும் டியாகோ இவி எனும் ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் காரையும், டிகோர் இவி எனும் காம்பேக்ட் செடான் ரக எலெக்ட்ரிக் காரையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், சில லக்சூரி கார் உற்பத்தியாளர்களும் தங்களின் பிராண்டின்கீழ் செடான் மற்றும் ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் எஸ்யூவி ரக காரிலேயே மின்சார தேர்வை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் எதை தேர்வு செய்வது என்பதை உங்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருத்து தேர்வு செய்யவும்.

விலை:
பெரும்பாலானோர்க்கு மின்சார வாகனம் வாங்க தடைக் கல்லாக இருப்பதே அதன் உச்சபட்ச விலையே ஆகும். அதேநேரத்தில் இந்திய சந்தையில் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அந்தவகையில், இப்போதைக்கு இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக பிஎம்வி நிறுவனத்தின் ஈஸ்-இ இருக்கின்றது. இதில் இருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்க வேண்டும். கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்தால் இக்காரின் பின் இருக்கையில் ஓர் சிறுவரும், ஓர் பெரியவரும் பயணிக்க முடியும்.

ஆனால், முன்னிருக்கையில் டிரைவரால் மட்டுமே பயணிக்க முடியும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 4.79 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களால் மட்டுமே ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியாக டியாகோ இவி இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக இருக்கின்றது.

பன்முக பிரீமியம் அம்சங்கள் கொண்ட இந்த காரா டாடா மோட்டார்ஸ் ரூ. 8.49 லட்சத்திற்கு விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் விலை குறைவு என்பதால் ரேஞ்ஜ் திறனும் குறைவாகவே உள்ளது. பிஎம்வி ஈஸ்-இ ஓர் முழு சார்ஜில் 200 கிமீ வரை மட்டுமே ரேஞ்ஜ் தரும். டாடா டியாகோ இவியின் ரேஞ்ஜ் திறன் 250 கிமீ முதல் 300 கிமீ வரை மட்டுமே ரேஞ்ஜ் தரும்.


Click it and Unblock the Notifications








