விற்பனைக்கு அறிமுகம்னுகூட அறிவிக்கல... அதுக்குள்ள இந்த டொயோட்டா காரை வாங்கிட்டாரு அமைச்சர் கேஎன் நேரு!
இந்தியாவில் இன்னும் விற்பனைக்கே வராத டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) சொகுசு காரை அமைச்சர் கேஎன் நேரு பிரத்யேகமாக பயன்பாட்டிற்காக களமிறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் லேண்ட் க்ரூஸர் (Land Cruiser)-ம் ஒன்று. இந்த காருக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நான்கு வருடங்கள் காத்திருந்து காரை பெர வேண்டும் என்கிற அளவிற்கு அக்காருக்கு டிமாண்ட் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய ஓர் சூப்பரான காரையே நம்ம ஊரு அரசியல்வாதி ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக எம்எல்ஏ-வும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேருவே அவர் ஆவார். இவரே டொயோட்டாவின் மிகவும் விலையுயர்ந்த லேண்ட் க்ரூஸர் காரை தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக இறக்குமதி செய்திருக்கின்றார். சிறப்பு என்னவென்றால் இந்த காரை இந்தியாவில் இன்னும் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கே கொண்டு வரவில்லை.

ஏன், இன்னும் அக்காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவிப்பைக்கூட வெளியிடவில்லை. இந்த மாதிரியான சூழலிலேயே பிரத்யேகமாக அமைச்சர் கே.என். நேரு டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரை வாங்கியிருக்கின்றார். புதிய கார் ஏற்கனவே அமைச்சரின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது. பேன்சி நம்பருடன் அக்கார் ஜொலிப்பதை நம்மால் காண முடிகின்றது.

சமீப சில காலமாக அமைச்சர் கே.என். நேரு மீது எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்த வண்ணம் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே பிரத்யேகமாக வெளிநாட்டில் இருந்து டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரை அவர் இறக்குமதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ஓர் அதிக சொகுசு மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த காராகும். நிறுவனம் லேண்ட் க்ரூஸர் எல்சி 300 காரையே விரைவில் இந்திய சந்தையில் சஹாரா வெர்ஷனில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அது விற்பனைக்குக் களமிறக்கப்பட உள்ளது.

ஒன்பது விதமான நிற தேர்வு, பை-எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், 18 அங்குல மெஷின் கட் அலாய் வீல் மற்றும் குரோம் ஃபினிஷ் கிரில், விண்டோ ஃப்ரேம், ரியர் பம்பர், அவுட்சைடு ரியர்-வியூ மிர்ரர்கள் மற்றும் டூர் ஹேண்டில்கள் என எக்கசக்க பிரீமியம் தர அம்சங்கள் ஆகியவற்றால் லேண்ட் க்ரூஸர் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு அம்சங்கள் அக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் லேண்ட் க்ரூஸர் எல்சி 300 காரில் 3.3 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்ட் வி6 டீசல் மோட்டாரே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 304 பிஎச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகிய சிறப்பு வசதிகளும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி300 காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

அமைச்சர் கேஎன் நேரு ஓர் டொயோட்டா கார் பிரியராக இருக்கின்றார். இதை உறுதிப்படுத்தும் வகையில் அவரிடத்தில் பன்முக டொயோட்டாவின் தயாரிப்புகள் பயன்பாட்டில் உள்ளன. டொயோட்டா ஃபார்ச்சூனர் புதிய மற்றும் பழைய தலைமுறை வெர்ஷன்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே புதியதாக ரூ. 2 கோடி மதிப்புள்ள புதிய லேண்ட் க்ரூஸரையும் அவர் வாங்கியிருக்கின்றார்.

இதனை அவர் பிரத்யேகமாக இறக்குமதி செய்திருப்பதால் வரி உட்பட பல மடங்கு கூடுதல் கட்டணங்களையும் அவர் செலுத்தியிருப்பார் என தெரிகின்றது. தற்போது, டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காருக்கு மிக அதிகளவில் டிமாண்ட் நிலவுகின்றது. அதேவேலையில், செமி கன்டக்டர் பற்றாக்குறையும் உலகில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது.
ஆகையால், போதியளவில் உற்பத்தி செய்ய முடியாமல் நிறுவனம் திண்டாடிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலே இக்காருக்கு நான்கு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்கின்றது. ஆனால், இந்த மாதிரியான ஓர் காரிலேயே தமிழக அமைச்சர் கேஎன் நேரு தற்போது கெத்தாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








