மாருதி கார்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல மவுசு இருக்கு போலயே- முதல் 3 இடங்களில் ஸ்விஃப்ட், எஸ்-பிரெஸ்ஸோ, டிசைர்
கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பயணிகள் கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

இந்தியா, பல வெளிநாட்டு பிராண்ட்களுக்கும் வாகன தயாரிப்பு மையமாக விளங்குகிறது. ஏனெனில் நம் நாட்டில் வாகனங்களை தயாரிப்பது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சற்று செலவு குறைந்தது உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்த பயணிகள் கார்கள் ஏற்றுமதி எண்ணிக்கை 2021 பிப்ரவரியை காட்டிலும் சுமார் 47.67% அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெறும் 34,681 பயணிகள் கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதத்தில் இந்த எண்ணிக்கை 51,213 ஆக பதிவாகியுள்ளது. உள்நாட்டு விற்பனையில் மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதியிலும் மாருதி சுஸுகி முன்னிலை வகித்து வருகிறது. இது கடந்த பிப்ரவரி மாதத்திலும் தொடர்ந்துள்ளது.

எந்த அளவிற்கு என்றால், கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கைகளில் விற்பனை செய்யப்பட்ட முதல் 3 மாடல்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையது ஆகும். இந்த வகையில் முதலிடத்தில் பிரபலமான ஹேட்ச்பேக் காரான மாருதி ஸ்விஃப்ட் உள்ளது. கடந்த மாதத்தில் 4,123 ஸ்விஃப்ட் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 பிப்ரவரியில் வெறும் 1,738 ஸ்விஃப்ட் கார்களே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்த்தோமேயானால், ஸ்விஃப்ட் கார்களின் ஏற்றுமதி சுமார் 137.23% அதிகரித்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரி மாத மொத்த கார்கள் ஏற்றுமதியில் ஸ்விஃப்ட்டின் பங்கு மட்டுமே 8.05% ஆகும். ஸ்விஃப்ட்டிற்கு அடுத்து ஏறக்குறைய 50 யூனிட்கள் குறைவாக, 4,071 யூனிட்களின் ஏற்றுமதி உடன் எஸ்-பிரெஸ்ஸோ இரண்டாவது இடத்தை தனதாக்கியுள்ளது. எஸ்-பிரேஸ்ஸோவின் 2021 பிப்ரவரி மாத ஏற்றுமதி எண்ணிக்கையும் 1,758 என்ற அளவிலேயே பதிவானது.

இந்த வகையில் எஸ்-பிரேஸ்ஸோவின் ஏற்றுமதி வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 131.57% உயர்ந்துள்ளது. இவற்றிற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி கார், டிசைர் ஆகும். ஸ்விஃப்ட்டின் செடான் வெர்சனாக விளங்கும் டிசைர் கடந்த மாதத்தில் 3,749 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆனது சுமார் 145.84% அதிகமாகும். ஏனெனில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 1,525 டிசைர் கார்களே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

டிசைரின் இந்த வருட-வருட ஏற்றுமதி வளர்ச்சியானது முதல் 2 மாருதி கார்களை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மாருதி கார்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகித்தாலும், அவற்றிற்கு போட்டியளிக்கும் வகையில் ஹூண்டாய் கார்களும் மாதந்தோறும் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரையில், 4வது இடமே ஹூண்டாய்க்கு கிடைத்துள்ளது.

ஹூண்டாயின் பிரீமியம் தர செடான் காரான வெர்னா கடந்த மாதத்தில் 3,506 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதுவே 2021 பிப்ரவரியில் இதனை காட்டிலும் ஏறக்குறைய ஆயிரம் வெர்னா கார்கள் குறைவாக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. 2021 பிப்ரவரியில் 1,899 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்த கியா செல்டோஸ் கடந்த மாதத்தில் 3,350 யூனிட்களின் ஏற்றுமதி உடன் 5வது இடத்தில் உள்ளது.

கடந்த மாதத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை பெற்றிருந்த பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் கடந்த மாதத்தில் மொத்தம் 3,228 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 2,423 பலேனோ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த 2021 பிப்ரவரியை காட்டிலும் 33.22% அதிகம் என்றாலும், கடந்த மாதத்தில்தான் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை பெற்றுள்ளதால், வரும் மாதங்களில் இதன் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7வது இடத்தில் நிஸான் சன்னி 3,109 யூனிட்களின் ஏற்றுமதி உடன் உள்ளது. இந்தியாவில் விற்பனையில் இல்லாத இந்த ஜப்பானிய நிஸான் செடான் கார் தான் கடந்த பெரும்பாலான மாதங்களில் ஏற்றுமதி லிஸ்ட்டில் முதலிடத்தில் இருந்துவந்தது. 2021 பிப்ரவரியிலும் கடந்த மாத எண்ணிக்கையை காட்டிலும் கிட்டத்தட்ட 31.40% அதிகமாக 4,532 சன்னி கார்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் இம்முறை இந்த மாடல் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








