கெத்து காட்டிய டாடாவின் பாதுகாப்பான கார்... இருப்பதிலேயே இதுதான் அதிகம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!
இந்தியாவில் கடந்த 2021-22ம் நிதியாண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் 2021-22ம் நிதியாண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி வேகன் ஆர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டில், 1,60,330 ஆக இருந்த வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை 2021-22ம் நிதியாண்டில் 1,88,838 ஆக உயர்ந்துள்ளது. இது 17.7 சதவீத வளர்ச்சியாகும்.

வேகன் ஆர் காரின் 2022 ஃபேஸ்லிஃப்ட் மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் காரணமாக வரும் மாதங்களில் வேகன் ஆர் காரின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2020-21ம் நிதியாண்டில், 1,72,671 ஆக இருந்த ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2021-22ம் நிதியாண்டில் 1,67,827 ஆக குறைந்துள்ளது. இது 2.8 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் 1,63,445 ஆக இருந்த பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை அதன்பின் வந்த 2021-22ம் நிதியாண்டில் 1,46,183 ஆக குறைந்துள்ளது.

இது 10.5 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ காரின் 2022 மாடலையும் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் 1,58,992 ஆக இருந்த ஆல்டோ காரின் விற்பனை எண்ணிக்கை கடந்த 2021-22ம் நிதியாண்டில் 1,45,167 ஆக இருந்தது. இது 8.7 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை மாருதி சுஸுகி டிசையர் பிடித்துள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் 1,28,251 ஆக இருந்த டிசையர் காரின் விற்பனை எண்ணிக்கை, அதன்பின் வந்த 2021-22ம் நிதியாண்டில் 1,26,790 ஆக குறைந்துள்ளது. இது 1.1 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் டிசையர் காரின் புதிய சிஎன்ஜி மாடலை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த பட்டியலில் முதல் 5 இடங்களையும் மாருதி சுஸுகி கார்களே பிடித்துள்ளன. ஆறாவது இடத்தை டாடா நிறுவனத்தின் நெக்ஸான் பிடித்துள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் 63,757 ஆக இருந்த டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை அதன்பின் வந்த 1,24,130 ஆக உயர்ந்துள்ளது. இது 94.6 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்திருப்பது டாடா நெக்ஸான்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் தன்வசம் வைத்துள்ளது.

இந்த பட்டியலில் 7வது இடத்தை ஹூண்டாய் கிரெட்டா பிடித்துள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் 1,20,035 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2021-22ம் நிதியாண்டில் 1,18,092 ஆக குறைந்துள்ளது. இது 1.6 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி எர்டிகா எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் 88,571 ஆக இருந்த எர்டிகாவின் விற்பனை எண்ணிக்கை, 2021-22ம் நிதியாண்டில் 1,17,150 ஆக உயர்ந்துள்ளது.

எர்டிகாவின் 2022 மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் 94,635 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, 2021-22ம் நிதியாண்டில் 1,13,711 ஆக உயர்ந்துள்ளது. இது 20.1 சதவீத வளர்ச்சியாகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடலை நடப்பாண்டின் மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை மாருதி சுஸுகி ஈக்கோ பிடித்துள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் 1,05,081 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை கடந்த 2021-22ம் நிதியாண்டில் 1,08,345 ஆக உயர்ந்துள்ளது. இது 3.1 சதவீத வளர்ச்சியாகும்.


Click it and Unblock the Notifications








