மாருதியின் புதிய காரை வாங்குவதற்கு முட்டி மோதும் மக்கள்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வரிசைல நிப்பீங்க!
மாருதி சுஸுகி நிறுவனம் களமிறக்கிய புதிய காரின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி வேகன் ஆர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18,656 ஆக இருந்த வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 17,766 ஆக குறைந்துள்ளது. இது 5 சதவீத வீழ்ச்சியாகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில்தான் வேகன் ஆர் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16,384 ஆக இருந்த பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 10,938 ஆக குறைந்துள்ளது. இது 33 சதவீத வீழ்ச்சியாகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில்தான் பலேனோ காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடலையும் விற்பனைக்கு களமிறக்கியது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17,303 ஆல்டோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 10,443 ஆக குறைந்துள்ளது.

இது 40 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் நான்காவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வெறும் 9,123 கிராண்ட் ஐ10 நியோஸ் கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11,540 ஆக இருந்தது. இது 21 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் 5வது இடத்தை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18,316 ஆக இருந்த ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 8,898 ஆக குறைந்துள்ளது. இது 51 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி செலிரியோ ஆறாவது இடத்தை தன்வசமாக்கியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 367 செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 7,066 ஆக உயர்ந்துள்ளது. இது 1,825 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் வளர்ச்சியை பதிவு செய்துள்ள ஒரே ஒரு கார் செலிரியோதான். அத்துடன் இது மிக பிரம்மாண்டமான வளர்ச்சியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய தலைமுறை செலிரியோ காரை கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து செலிரியோ காரின் சிஎன்ஜி மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதன் காரணமாகவே செலிரியோ காரின் விற்பனை இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது.

செலிரியோ காரின் பெட்ரோல் இன்ஜின் மாடல் ஒரு லிட்டருக்கு 26.68 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் செலிரியோ காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 35.60 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி செலிரியோ காரை வாடிக்கையாளர்கள் பலரும் விரும்புவதற்கு இந்த சிறப்பான மைலேஜ் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7,738 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 6,694 ஆக குறைந்துள்ளது. இது 13 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் டாடா டியாகோ எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6,656 ஆக இருந்த டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 5,062 ஆக குறைந்துள்ளது. இது 24 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் ஐ20 ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5,002 ஆக இருந்த ஹூண்டாய் ஐ20 காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரலில் 4,707 ஆக குறைந்துள்ளது. இது 6 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை டாடா அல்ட்ராஸ் தன்வசப்படுத்தியுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 4,266 அல்ட்ராஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 6,649 ஆக இருந்தது. இது 36 சதவீத வீழ்ச்சியாகும்.


Click it and Unblock the Notifications








