இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம்... டாடாவிற்கு கடும் வீழ்ச்சி!
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் முதலிடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 19,202 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 20,264 ஆக இருந்தது.

இதன் மூலம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் விற்பனையில் 5.2 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி வேகன் ஆர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 18,728 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 14,669 ஆக குறைந்துள்ளது. இது 21.6 சதவீத வீழ்ச்சியாகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் புதிய 2022 வேகன் ஆர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எனவே வரும் மாதங்களில் வேகன் ஆர் காரின் விற்பனை உயரும் என மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்க்கிறது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 12,570 பலேனோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 20,070 ஆக இருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி பலேனோ விற்பனையில் 37.3 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை போலவே, 2022 பலேனோ காரும் வெகு சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

சந்தையை விட்டு வெளியேறிய பழைய மாடலை காட்டிலும், புதிய மாருதி சுஸுகி பலேனோ பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே வரும் மாதங்களில் இந்த காரின் விற்பனையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்டோ கார் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16,919 ஆக இருந்த மாருதி சுஸுகி ஆல்டோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வெறும் 11,551 ஆக குறைந்துள்ளது. இது 31.7 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி செலிரியோ ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6,214 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 9,896 ஆக உயர்ந்துள்ளது. இது 59.2 சதவீத வளர்ச்சியாகும்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ கார் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும். இதன் காரணமாகவும், புதிய அப்டேட்கள் காரணமாகவும் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை உயர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10,270 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 8,552 ஆக குறைந்துள்ளது. இது 16.7 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ பிடித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7,040 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 8,140 ஆக உயர்ந்துள்ளது. இது 15.6 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் ஐ20 எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9,001 ஆக இருந்த ஹூண்டாய் ஐ20 காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 5,830 ஆக சரிந்துள்ளது.

இது 35.2 சதவீத சரிவாகும். இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. இது குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ள 'மேட் இன் இந்தியா' கார்களில் ஒன்றாகும். கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6,832 ஆக இருந்த டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 5,011 ஆக குறைந்துள்ளது. இது 26.6 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை டாடா டியாகோ பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6,787 ஆக இருந்த டாடா டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 4,091 ஆக குறைந்துள்ளது. இது 39.7 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி செலிரியோ மற்றும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ ஆகிய 2 கார்கள் தவிர, மீதி 8 கார்களும் விற்பனையில் வீழ்ச்சியடைந்துள்ளன.


Click it and Unblock the Notifications








