'டல்' அடிக்கும் பாதுகாப்பான டாடா காரின் விற்பனை... மைலேஜை வாரி வழங்கும் மாருதி காரின் சேல்ஸ் தூள் கௌப்புது!
இந்தியாவில் நடப்பாண்டு மார்ச் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 ஹேட்ச்பேக் ரக கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி வேகன் ஆர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 18,757 ஆக இருந்த வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 24,634 ஆக உயர்ந்துள்ளது. இது 31 சதவீத வளர்ச்சியாகும்.

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் 2022 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எனவே வரும் மாதங்களில் வேகன் ஆர் காரின் விற்பனை மேலும் உயரும் என மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் 14,520 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 21,217 ஆக இருந்தது. இது 32 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ காரின் 2022 மாடலையும் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வந்தது. பழைய மாடலை காட்டிலும் புதிய மாடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியிலும் மாருதி சுஸுகி பலேனோ அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

எனவே வரும் மாதங்களில் பலேனோவின் விற்பனையும் உயரும் என மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 21,714 ஆக இருந்த ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு மார்ச் மாதம் வெறும் 13,623 ஆக சரிந்துள்ளது. இது 37 சதவீத வீழ்ச்சியாகும்.

முதல் மூன்று இடங்களையும் மாருதி சுஸுகி கார்களே பிடித்துள்ள நிலையில், நான்காவது இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 11,020 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 9,687 ஆக குறைந்துள்ளது. இது 12 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 7,252 ஆக இருந்த எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 7,870 ஆக உயர்ந்துள்ளது. இது 9 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 17,401 ஆக இருந்த ஆல்டோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் வெறும் 7,621 ஆக குறைந்துள்ளது. இது 56 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ காரின் புதிய தலைமுறை மாடலை உருவாக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த புதிய தலைமுறை மாடல் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை மாருதி சுஸுகி செலிரியோ பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 4,720 ஆக இருந்த செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 6,442 ஆக உயர்ந்துள்ளது. இது 36 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலிலேயே மாருதி சுஸுகி செலிரியோதான் மிகப்பெரிய வளர்ச்சி சதவீதத்தை கொண்டிருக்கும் கார் ஆகும்.

செலிரியோ காரின் புதிய தலைமுறை மாடல் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நடப்பாண்டு ஜனவரி மாதம் செலிரியோ காரின் சிஎன்ஜி மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக இந்த சிறப்பான விற்பனை வளர்ச்சியை மாருதி சுஸுகி செலிரியோ பதிவு செய்திருக்கலாம்.

மாருதி சுஸுகி செலிரியோ கார் மைலேஜில் தலைசிறந்து விளங்குகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சிறப்பான மைலேஜை வழங்கும் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை வளர்ச்சியடைந்துள்ள நிலையில், பாதுகாப்பான கார்களில் ஒன்றாக அறியப்படும் டாடா அல்ட்ராஸின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ள டாடா அல்ட்ராஸ் காருக்கு, இந்த பட்டியலில் எட்டாவது இடமே கிடைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 7,550 ஆக இருந்த டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் வெறும் 4,727 ஆக குறைந்துள்ளது. இது 37 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டொயோட்டா க்ளான்சா ஆகியவை, டாடா அல்ட்ராஸ் காரின் நேரடி போட்டியாளர்களாக உள்ளன.

இந்த 2 கார்களின் புதிய 2022 மாடல்களுமே சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. இது டாடா அல்ட்ராஸ் காருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அல்ட்ராஸ் காரின் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அல்ட்ராஸ் காரில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இல்லை என்ற குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் ஹூண்டாய் ஐ20 கார், ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 9,045 ஆக இருந்த ஐ20 காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் வெறும் 4,693 ஆக குறைந்துள்ளது. இது 48 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை மாருதி சுஸுகி இக்னிஸ் பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 4,359 ஆக இருந்த இக்னிஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 4,472 ஆக உயர்ந்துள்ளது. இது 3 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் மொத்தம் 7 கார்களுடன் மாருதி சுஸுகி நிறுவனம் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது.


Click it and Unblock the Notifications








