இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு எந்த கார் அதிகமாக ஏற்றுமதியாகிறது தெரியுமா? டாப் 10 பட்டியல் இதோ...
இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் கார்களில் எந்த கார்கள் அதிகமாக ஏற்றுமதியாகிறது என்கிற டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலை கீழே காணலாம் வாருங்கள்

இந்தியாவிலிருந்து ஏராளமான கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என நாம் அனைவருக்கும் தெரியும். கடந்த நிதியாண்டில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர் என்ற ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ரிப்போர்ட் குறித்த செய்தியை நாம் இங்கு விளக்கமாகப் பார்க்கலாம் வாருங்கள்

கடந்த 2021 நிதியாண்டு அதாவது 2020-21ம் நிதியாண்டில் இந்தியாவிலிருந்து மொத்தம் 4.04 லட்சம் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகியிருந்தன. இந்நிலையில் கடந்த 2021-22ம் நிதியாண்டில் அந்த ஏற்றுமதி 43 சதவீதம் அதிகரித்து தற்போது 5.77 லட்சம் கார்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளன.

அதில் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்ததில் மாருதி சுஸூகி நிறுவனம் முதல் 3 இடங்களில் பிடித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவிலிருந்து மாருதி சுஸூகி நிறுவனத்தின் டிசையர் கார்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மொத்தம் 48,047 டிசையர் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதில் அதிசயம் என்னவென்றால் இந்த கார் 2020-21ம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட கார் பட்டியலில் டாப் 10 பட்டியலிலேயே இல்லாத கார்.

டிசையர் கார் முதலிடத்தைப் பிடித்த நிலையில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் பலேனோ கார் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 45,332 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. மூன்றாம் இடத்தில் அதே மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் உள்ளது. இது மொத்தம் 32,862 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இதே நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் 27,322 கார்களை ஏற்றுமதி செய்து பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

முதல் மூன்று இடங்களை மாருதி நிறுவனமே பிடித்த நிலையில் இதன் கடந்தாண்டு விற்பனைகளை ஒப்பிடும் போது டிசையர் கார் டாப் 10 பட்டியலிலேயே இல்லை எனக் குறிப்பிட்டிருந்தோம். அதே போல பலேனோ கார் 9வது இடத்திலிருந்து தற்போது 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது ஸ்விஃப்ட் காரும் டாப் 10 பட்டியலிலேயே இல்லை.

அடுத்தபடியாக ஹூண்டாய் நிறுவனம் மொத்தம் வெர்னா, க்ரெட்டா எஸ்யூவி, கிராண்ட் ஐ10 ஆகிய கார்களை அதிகமாக ஏற்றுமதி செய்தி டாப் 10 பட்டியலுக்குள் வந்துள்ளது. வெர்னா 31,099 கார்களை ஏற்றுமதி செய்து 5வது இடத்திலும், 29,747 கார்களை ஏற்றுமதி செய்து க்ரெட்டா 7வது இடத்திலும், 23,877 கார்களை ஏற்றுமதி செய்து கிராண்ட் ஐ10 கார் 10வது இடத்திலும் உள்ளது.

இது போக கியா, ஃபோக்ஸ்வாகன், நிஸான் ஆகிய நிறுவனங்களின் தலா ஒரு கார் டாப் 10 பட்டியலுக்குள் வந்துள்ளது. இதில் கியா நிறுவனம் 31,793 Seltos கார்களை ஏற்றுமதி செய்து பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. இது கடந்தாண்டு ஏற்றுமதியை விட 1.3 சதவீதம் குறைவு.

ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் 30,603 வென்டோ கார்களை ஏற்றுமதி செய்து பட்டியலில் 6வது இடத்தையும், நிஸான் நிறுவனம் 29,663 nissan sunny கார்களை விற்பனை செய்து பட்டியலில் 8வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

2020-21ம் நிதியாண்டில் ஃபோர்டு நிறுவனத்தின் எக்கோ ஸ்போர்ட் என்ற கார் தான் பட்டியலிலேயே முதலிடத்திலிருந்தது. மொத்தம் 39,750 கார்களை ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் இந்தாண்டு வெறும் 15,382 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியைக் கடந்தாண்டு செப்டம்பர் மாதமே நிறுத்திவிட்டது.

அதே போலக் கடந்த 2020-21ம் ஆண்டு பட்டியலில் செவர்லெட் நிறுவனத்தின் பீட்ஸ் கார்கள் மொத்தம் 28,619 ஏற்றுமதியாகி பட்டியலில் 4வது இடத்திலிருந்தது. இந்த கார் இந்தாண்டு ஒரு காரை கூட ஏற்றுமதி செய்யவில்லை கடந்த 2017லேயே விற்பனையை நிறுத்திய செவர்லேட் நிறுவனம் ஏற்றுமதியை மட்டும் தொடர்ந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு அதையும் முற்றிலுமாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








