2022 பிப்ரவரி விற்பனையில், இந்தியாவின் டாப்-10 செடான் கார்கள்!! வழக்கம்போல் முதலிடத்தில் மாருதி டிசைர்
செடான் கார்களுக்கான மார்க்கெட் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் விதத்தில் வெளியாகியுள்ள கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட செடான் கார்கள் குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் மிக சிறப்பான எண்ணிக்கையில் செடான் கார்களை விற்பனை செய்யும் ஒரே நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் டிசைர் கடந்த மாதத்தில் மொத்தம் 17,438 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2021 பிப்ரவரியில் விற்கப்பட்ட டிசைர் கார்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 46.53% அதிகமாகும்.

ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 11,901 டிசைர் செடான் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த மாத மொத்த செடான் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகியின் இந்த சப்-4 மீட்டர் செடான் காரின் பங்கு 47.15% ஆகும். அதாவது கிட்டத்தட்ட இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 2இல் 1 செடான் கார் மாருதி டிசைர் ஆக உள்ளது. இதில் இருந்து இந்த குறிப்பிட்ட செடான் மாடலுக்கு மட்டும் எத்தகைய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதை அறியலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் தான் டிசைர் மாடலில் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டை அறிமுகப்படுத்தி இருந்தது. இதனால் இந்த செடான் காரின் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் டாடா டிகோர் 4,901 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இதற்கும் டிசைரின் விற்பனை எண்ணிக்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.

இருப்பினும், டாடா டிகோரின் விற்பனை சமீப மாதங்களாக நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த மாதத்தில் 4,901 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள டிகோர் செடான் கார்கள் 2021 பிப்ரவரி மாதத்தில் வெறும் 1,939 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தது. இதன்படி பார்க்கும்போது, இந்த டாடா செடான் காரின் விற்பனை சுமார் 110.99% அதிகரித்துள்ளது.

அதுவே கடந்த ஆண்டு பிப்ரவரியில் 4,300 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த ஹூண்டாய் அவ்ரா கடந்த பிப்ரவரி மாதத்தில் அதனை காட்டிலும் 14.70% குறைவாக 3,668 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவ்ராவின் விற்பனையாவது பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இதற்கு அடுத்து 4வது இடத்தில் உள்ள ஹோண்டா அமேஸின் விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில் சுமார் 31.06% குறைந்துள்ளது.

அதாவது 2021 பிப்ரவரியில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் யூனிட்கள் விற்கப்பட்டு இருந்த இந்த ஹோண்டா சப்-4மீ செடான் கார் கடந்த மாதத்தில் 3,405 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது. ஐந்தாவது இடத்தை பிரபலமான ஹோண்டா சிட்டி செடான் மாடல் 2,836 யூனிட்களின் விற்பனை உடன் தக்க வைத்து கொண்டுள்ளது. இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் ஹோண்டா சிட்டியின் விற்பனை சமீப ஆண்டுகளாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வருகிறது.

இந்த ஹோண்டா காம்பெக்ட் செடான் காரின் கடந்த மாத விற்பனை 2021 பிப்ரவரி உடன் ஒப்பிடுகையில் 12.36% அதிகரித்துள்ளது. இதற்கடுத்து 6வது மற்றும் 7வது இடங்களில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான விற்பனை எண்ணிக்கைகளுடன் மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் ஸ்கோடாவின் சமீபத்திய அறிமுகமான ஸ்லாவியா மாடல்கள் பிடித்துள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,912 மற்றும் 1,862 ஆகும்.

இவற்றை தொடர்ந்து 8வது இடத்தில் உள்ள ஹூண்டாயின் பிரீமியம் தர செடான் காரான வெர்னாவின் விற்பனை கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 48.31% குறைந்துள்ளது. இந்த வரிசையில் இதற்கடுத்துள்ள செடான் கார்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 300க்கும் குறைவு ஆகும். அதிகப்பட்சமாக ஃபோக்ஸ்வேகன் வெண்டோ 277 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








