இந்தியாவில் செடான் கார்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி டிசைர்- மாருதிக்கு அடுத்த இடத்தில் ஹோண்டா
தற்சமயம் எஸ்யூவி கார்களுக்கான ட்ரெண்ட் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்தாலும், செடான் கார்களின் விற்பனையும் ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகி வருகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள கடந்த 2022 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட செடான் கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய 2022 ஆண்டின் துவக்க மாதமான கடந்த ஜனவரி மாதத்திலும் வழக்கம்போல் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் செடான் காராக மாருதி சுஸுகியின் டிசைர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 14,967 டிசைர் செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை முந்தைய 2021 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிசைர் கார்களுடன் ஒப்பிடுகையில் வெறும் 1% மட்டுமே குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் கடந்த மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் சில நூறு யூனிட்கள் மட்டுமே அதிகமாக, 15,125 டிசைர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
| Rank | Model | Jan-22 | Jan-21 | Growth (%) |
| 1 | Maruti Dzire | 14,967 | 15,125 | -1 |
| 2 | Honda Amaze | 5,395 | 5,477 | -1.4 |
| 3 | Honda City | 3,950 | 3,667 | 7.7 |
| 4 | Hyundai Aura | 3,333 | 4,183 | -20.3 |
| 5 | Tata Tigor | 2,952 | 2,025 | 45.7 |
| 6 | Maruti Ciaz | 1,666 | 1,347 | 23.6 |
| 7 | Hyundai Verna | 1,622 | 2,000 | -18.9 |
| 8 | Skoda Octavia | 166 | 8 | 1975 |
| 9 | Volkswagen Vento | 139 | 220 | -36.8 |
| 10 | Skoda Superb | 122 | 239 | -48.9 |

எஸ்யூவி, எம்பிவி, ஹேட்ச்பேக் என மற்ற கார்கள் பிரிவில் சொல்லும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும், செடான் கார்களின் விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து ஹோண்டா இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. இந்த நிறுவனத்தின் அமேஸ் மற்றும் சிட்டி செடான் மாடல்கள் டிசைருக்கு அடுத்து முறையே 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன.

இதில் சற்று குறைவான விலையில் சந்தைப்படுத்தப்பட்டுவரும் அமேஸ் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 5,395 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரியிலும் அமேஸின் விற்பனை எண்ணிக்கை (5,477 யூனிட்கள்) கிட்டத்தட்ட இந்த அளவிலேயே இருந்தது. இருப்பினும் துல்லியமாக பார்த்தோமேயானால், அந்த மாதத்தை காட்டிலும் கடந்த ஜனவரியில் ஹோண்டா அமேஸின் விற்பனை எண்ணிக்கை 1.4% குறைந்துள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள ஹோண்டா சிட்டி கடந்த மாதத்தில் மொத்தம் 3,950 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்திற்கு மிகவும் நம்பிக்கையான மாடலாக சிட்டி விளங்குகிறது. சற்று பிரீமியம் தரத்திலான செடான் காரான இதன் விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில் கணிசமாக 7.7% அதிகரித்துள்ளது. ஏனெனில் 2021 ஜனவரியில் 3,667 சிட்டி கார்களே விற்கப்பட்டு இருந்தன.

இந்த வரிசையில் 4அது இடத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸின் செடான் மாடலான அவ்ரா 3,333 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் உண்மையில் அவ்ரா கார்களின் இந்த விற்பனை எண்ணிக்கை ஆனது 4,183 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்த 2021 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 20.3% குறைவாகும். இதற்கடுத்து ஐந்தாவது இடத்தை இந்தியாவின் பாதுகாப்புமிக்க செடான் மாடலாக விளங்கும் டாடா டிகோர் பெற்றுள்ளது.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிகோர் செடான் கார்களின் எண்ணிக்கை 2,952 யூனிட்களாகும். டிகோர் உள்பட டாடா கார்களின் விற்பனை கடந்த சில மாதங்களில் நன்றாகவே முன்னேற்றம் கண்டு வருவதை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். டிகோரின் கடந்த மாத விற்பனையும் 2021 ஜனவரியை காட்டிலும் சுமார் 45.7% அதிகரித்துள்ளது. ஏனென்றால், அந்த மாதத்தில் 2,025 டிகோர் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இவற்றை தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விற்பனை எண்ணிக்கைகளுடன் மாருதி சுஸுகி சியாஸ் (1,666 யூனிட்கள்) மற்றும் ஹூண்டாய் வெர்னா (1,622) முறையே 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ளன. இதில் ஹூண்டாய் செடான் மாடலின் விற்பனை 2021 ஜனவரியை காட்டிலும் 18.9% குறைவு என்றாலும், மாருதியின் பிரீமியம் தரத்திலான செடான் காரான சியாஸின் விற்பனை 23.6% அதிகரித்துள்ளது. இவைதான் இந்தியாவில் அதிக யூனிட்களில் விற்பனையாகும் செடான் கார்களாகும். இதற்கடுத்து உள்ளவை 200க்கும் குறைவான யூனிட்களே விற்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








