இந்தியாவில் ஜூன் மாதம் அதிகம் விற்பனையான டாப்-3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்... மூனுல 2 டாடா காருங்க!
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சூழலில், கடந்த ஜூன் மாதம் இந்திய சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-3 காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் (Tata Nexon)
இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் தன்வசப்படுத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் வெறும் 8,033 நெக்ஸான் கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது.

ஆனால் நடப்பாண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் 14,295 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டாடா நெக்ஸான் கார் விற்பனையில் 78 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்த பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கை காரணமாக இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில் (ஒட்டுமொத்தமாக அனைத்து கார்களையும் உள்ளடக்கியது) டாடா நெக்ஸான் 4வது இடத்தை பிடித்துள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா (மிட்-சைஸ் எஸ்யூவி) மற்றும் மாருதி சுஸுகி ஆல்டோ (ஹேட்ச்பேக்) போன்ற பிரபலமான கார்களையும், டாடா நெக்ஸான் பின்னுக்கு தள்ளியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரின் 2 எலெக்ட்ரிக் மாடல்களையும் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் (Tata Nexon EV) மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் (Tata Nexon EV MAX) என்ற பெயர்களில் அந்த மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

டாடா பன்ச் (Tata Punch)
இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருப்பதும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புதான். அது டாடா பன்ச். இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜூன் மாதம் 10,414 பன்ச் சப்-காம்பேக்ட் எஸ்யூவி (Sub-compact SUV) கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டாடா பன்ச் கார் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிட முடியாது.

ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue)
விற்பனையில் 112 சதவீதம் என்ற மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்திருந்தாலும் கூட, ஹூண்டாய் வெனியூ 2வது இடத்தை தவற விட்டுள்ளது. வெறும் 93 யூனிட்கள் என்ற மிக குறுகிய வித்தியாசத்தில், ஹூண்டாய் வெனியூ காரை பின்னுக்கு தள்ளி விட்டு, டாடா பன்ச் கார் இரண்டாவது இடத்தை தன்வசமாக்கி விட்டது.

ஹூண்டாய் நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் 10,321 வெனியூ கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகிய கார்களுக்கு இடையேயான வித்தியாசம் 93 யூனிட்கள் மட்டுமே. இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 4,865 வெனியூ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது 10,321 ஆக உயர்ந்திருப்பதன் மூலம், 112 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வெனியூ காரின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு காரணம் உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் 2022 வெனியூ ஃபேஸ்லிஃப்ட் (2022 Hyundai Venue Facelift) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பழைய மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய மாடலில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2022 ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே ஹூண்டாய் வெனியூ கார் விற்பனையில் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது விற்பனை எண்ணிக்கையின் மூலமே நமக்கு தெளிவாக தெரிகிறது.

ஹூண்டாய் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மட்டுமல்லாது, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி காரின் புதிய 2022 (2022 Maruti Suzuki Brezza) மாடலும் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகள் குவிந்துள்ளன. எனவே அடுத்த மாதம் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார், இந்த பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








