டாடாதான் ஃபுல் டாமினேசன்... நம்ப முடியாத அளவுக்கு கார் சேல்ஸ் ஆகுது... மாருதிலாம் இந்த லிஸ்ட்லயே இல்ல!
டாடா நிறுவன கார்கள் விற்பனையில் கெத்து காட்டி வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் சமீப காலமாக காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் கார்களின் விற்பனை பிரம்மிக்க வைக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. இங்கே மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் ஒட்டுமொத்த கார் விற்பனையில் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

இந்த சூழலில், இந்திய சந்தையில் நடப்பு 2022 காலாண்டர் ஆண்டின் முதல் அரையாண்டில் (2022 ஜனவரி-ஜூன்) அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-3 காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். சரி, வாருங்கள். செய்திக்குள் செல்வோம்.

டாடா நெக்ஸான் (Tata Nexon)
இந்திய சந்தையில் 2022ம் ஆண்டின் முதல் அரையாண்டில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் தன்வசப்படுத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் ஒட்டுமொத்தமாக 82,770 நெக்ஸான் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் கடந்த 2021ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (2021 ஜனவரி-ஜூன்) வெறும் 46,247 டாடா நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் டாடா நெக்ஸான் கார் விற்பனையில் 79 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்திய சந்தையில் சமீப காலமாக டாடா நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் விற்பனையும் சூடுபிடித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டாடா பன்ச் (Tata Punch)
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதும் டாடா நிறுவனத்தின் தயாரிப்புதான். அது டாடா பன்ச். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் ஒட்டுமொத்தமாக 60,932 பன்ச் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் அதிகம் விற்பனையான காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியலில் டாடா பன்ச் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

டாடா பன்ச் கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிட முடியாது. இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மிக குறுகிய காலத்திலேயே டாடா பன்ச் கார் இந்த பட்டியலில் இடம்பிடித்து விட்டது.

இங்கே மற்றொரு விஷயம் என்னவென்றால், டாடா நெக்ஸான் மற்றும் டாடா பன்ச் ஆகிய 2 கார்களுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார்கள் ஆகும். இந்த 2 கார்களின் விற்பனையும் மிகவும் சிறப்பாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue)
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் ஒட்டுமொத்தமாக 57,822 வெனியூ கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்த பட்டியலில் ஹூண்டாய் வெனியூ மூன்றாவது மற்றும் கடைசி இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டின் இதே காலகட்டத்தில், ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் 54,675 வெனியூ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஆனால் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் இந்த எண்ணிக்கை 57,822 ஆக உயர்ந்துள்ளது. இது 6 சதவீத வளர்ச்சியாகும். ஹூண்டாய் நிறுவனம், அப்டேட் செய்யப்பட்ட 2022 வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெகு சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த புதிய மாடலில் டிசைன் அப்டேட்கள் செய்யப்பட்டிருப்பதுடன், புதிய வசதிகளும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய மாடலின் வருகை காரணமாக, நடப்பாண்டின் இரண்டாவது அரையாண்டில் (2022 ஜூலை-டிசம்பர்) ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெனியூ காரானது, டாடா நெக்ஸான் காரின் நேரடி போட்டி மாடல் ஆகும். இதுதவிர மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களும், ஹூண்டாய் வெனியூ காரின் முக்கியமான போட்டி மாடல்களாக உள்ளன.


Click it and Unblock the Notifications








