இது மாருதியோட இரும்பு கோட்டை... வேற யாருனாலயும் உள்ள நுழைய முடியாது... அது டாடாவா இருந்தாலும் சரி!
'ஹேட்ச்பேக் கார்களின் கிங்' என்பதை மாருதி சுஸுகி நிறுவனம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த கார் விற்பனையில், ஹேட்ச்பேக் ரக கார்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக இருக்கிறது. இந்த ஹேட்ச்பேக் செக்மெண்ட்டை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி நிறுவனம்தான் கிங். மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த இரும்பு கோட்டையில், டாடா போன்ற வேறு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த முடியாத சூழல் தற்போது உள்ளது.

இந்த விஷயம் அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆம், நடப்பாண்டின் முதல் அரையாண்டில் (2022 ஜனவரி-ஜூன்), மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-3 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த 3 இடங்களையும் மாருதி சுஸுகி நிறுவனமே தன்வசப்படுத்தியுள்ளது.

மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R)
நடப்பாண்டின் முதல் அரையாண்டில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி வேகன் ஆர் தட்டி சென்றுள்ளது. நடப்பாண்டின் முதல் அரையாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,13,407 வேகன் ஆர் ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது, கடந்த 2021ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (2021 ஜனவரி-ஜூன்) வெறும் 94,839 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் விற்பனையில் 20 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட வேகன் ஆர் காரின் புதிய மாடலை மாருதி சுஸுகி நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்த புதிய மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது, தற்போது வெளியாகியுள்ள விற்பனை எண்ணிக்கை மூலம் தெளிவாக தெரிகிறது. அத்துடன் வேகன் ஆர் காரின் சிஎன்ஜி மாடலும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதால், வேகன் ஆர் காரின் சிஎன்ஜி மாடலும் விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)
விற்பனையில் 11 சதவீத வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, நடப்பாண்டின் முதல் அரையாண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டின் முதல் அரையாண்டில் ஒட்டுமொத்தமாக 1,02,206 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டின் முதல் அரையாண்டில் 91,177 ஆக குறைந்துள்ளது. இது 11 சதவீத வீழ்ச்சி ஆகும். செமி கண்டக்டர் சிப்களுக்கான சப்ளையில் தற்போது மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாகவே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை சரிவடைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது தற்காலிகமான வீழ்ச்சியாக மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. ஏனெனில் ஸ்விஃப்ட் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் என்பதுடன், வெகு விரைவில் ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. எனவே வரும் காலங்களில் ஸ்விஃப்ட் காரின் விற்பனை கிடுகிடுவென உயரலாம்.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno)
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை போலவே, பலேனோ காரும் விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது. எனினும் சிறப்பான விற்பனை எண்ணிக்கை மூலமாக மாருதி சுஸுகி பலேனோ கார் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை தன்வசப்படுத்தி விட்டது. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் 74,892 பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டின் முதல் அரையாண்டில் 93,823 ஆக இருந்தது. இது 20 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ காரின் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை கடந்த பிப்ரவரி மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பழைய மாடலை காட்டிலும் இந்த புதிய மாடல் பல்வேறு விதங்களிலும் மேம்பட்டதாக வந்துள்ளது.

இருப்பினும் மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை குறைந்துள்ளது. இதற்கும் தற்போது மிக தீவிரமாக இருந்து வரும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறைதான் மிகவும் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இதற்கிடையே நாங்கள் ஏற்கனவே கூறியதை போல், இந்த பட்டியலில் 3 இடங்களையும் மாருதி சுஸுகி நிறுவனமே தன்வசப்படுத்தியுள்ள நிலையில், வேறு நிறுவனங்களுக்கு இடமில்லை.


Click it and Unblock the Notifications








