இது முத்துப்பாண்டி கோட்டை டீ! பிரகாஷ் ராஜ் ஸ்டைலில் தரமான சம்பவத்தை செய்த மாருதி! விஜயாக மாறி அடிக்க ஆளே இல்ல!
பிரகாஷ் ராஜ் ஸ்டைலில் மாருதி சுஸுகி நிறுவனம் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக கார்கள் விற்பனையாகும் செக்மெண்ட்களில் ஒன்றாக ஹேட்ச்பேக் செக்மெண்ட் உள்ளது. கார் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இந்த செக்மெண்ட் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை கொடுக்கிறது. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம்தான் இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் நிறைய ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்வது இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-3 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto)
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி ஆல்டோ பெற்றுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 17,389 ஆக இருந்த மாருதி சுஸுகி ஆல்டோ காரின் விற்பனை, நடப்பாண்டு அக்டோபர் மாதம் 21,260 ஆக உயர்ந்துள்ளது.
இது 22 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் புதிய ஆல்டோ கே10 (Alto K10) காரை வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மாருதி சுஸுகி ஆல்டோ காரின் விற்பனை எண்ணிக்கை சிறப்பான முறையில் அதிகரித்திருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R)
மாருதி சுஸுகி ஆல்டோவை போன்றே மிகவும் பிரபலமாக உள்ள மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில் வெறும் 12,335 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 17,945 ஆக உயர்ந்துள்ளது. இது 45 சதவீத வளர்ச்சியாகும்.
மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை நடப்பாண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ததும், இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட் விற்பனைக்கு கிடைப்பதும்தான் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான இரண்டு காரணங்களாக கருதப்படுகின்றன.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)
இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9,180 ஆக இருந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 17,231 ஆக உயர்ந்துள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் சந்தேகமே வேண்டாம்.
மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அத்துடன் ஸ்விஃப்ட் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. எனவே வரும் காலங்களில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த ஹேட்ச்பேக் கோட்டையை தகர்க்கும் வாய்ப்பு தற்போதைக்கு வேறு எந்த நிறுவனத்திற்கும் இல்லை. இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தாலும், ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து சீராக இருப்பதில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு மிக முக்கியமான பங்கு உள்ளது.


Click it and Unblock the Notifications








