இவ்ளோ பிரச்னை இருக்கப்பவே இந்த அளவுக்கு கார் சேல்ஸ் ஆகுதா? ஹூண்டாய் ,கியா, மஹிந்திரா ஆதிக்கம்!
2022 முதல் அரையாண்டின் டாப்-3 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்த கார்கள்தான் மிகவும் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. எஸ்யூவி செக்மெண்ட்டில், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் ஃபுல்-சைஸ் எஸ்யூவி என பல்வேறு சப்-செக்மெண்ட்கள் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

இதில், ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய காரணத்தால் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி ரகங்களை சேர்ந்த கார்களின் விற்பனை கொடி கட்டி பறந்து வருகிறது. மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டை பொறுத்தவரையில் சமீப காலமாக ஏராளமான கார்கள் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகமாகி கொண்டே உள்ளன.

ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இதுதவிர டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா என இந்த செக்மெண்ட்டில் கூடிய விரைவில் இன்னும் பல்வேறு கார்கள் விற்பனைக்கு களம் இறங்கவுள்ளன. எனவே வரும் காலங்களில் இந்த செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்க போவது உறுதி.

இந்த சூழலில், நடப்பு 2022ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (2022 ஜனவரி-ஜூன்), இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-3 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹூண்டாய், கியா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் தலா 1 இடங்களை பிடித்துள்ளன.

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta)
ஹூண்டாய் நிறுவனம் நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் ஒட்டுமொத்தமாக 67,421 க்ரெட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை ஹூண்டாய் க்ரெட்டா தன்வசப்படுத்தியுள்ளது. இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் (2021 ஜனவரி-ஜூன்) ஹூண்டாய் நிறுவனம் 67,283 க்ரெட்டா கார்களை விற்பனை செய்திருந்தது.

ஹூண்டாய் க்ரெட்டா கார் முதலிடத்தை பிடித்திருந்தாலும், அதன் விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கு தற்போதைய செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னைதான் முக்கியமான காரணமாக உள்ளது. இந்த பிரச்னை காரணமாக ஹூண்டாய் க்ரெட்டா காரின் உற்பத்தியும், விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கியா செல்டோஸ் (Kia Seltos)
முதலிடத்தில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனையில் வளர்ச்சி எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், இரண்டாவது இடத்தில் உள்ள கியா செல்டோஸ் காரின் விற்பனை 3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு காரணமும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்களுக்கு மிகவும் அவசியமான செமி கண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் மட்டுமல்லாது, மாருதி சுஸுகி போன்ற நிறுவனங்களும் தற்போது தடுமாற்றத்தைதான் சந்தித்து வருகின்றன என்பது கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

இதற்கிடையே கியா நிறுவனம் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் ஒட்டுமொத்தமாக 48,320 செல்டோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டின் முதல் அரையாண்டில் 49,643 ஆக இருந்தது. இது 3 சதவீத வீழ்ச்சியாகும். ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய 2 கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700)
மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன! ஆனால் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னையால் இந்த காரையும் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் டெலிவரி செய்ய முடியாத சூழல் காணப்படுகிறது. எனவே காத்திருப்பு காலம் அதிகரித்து, முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் பலர் டெலிவரிக்காக வெயிட்டிங்கில் உள்ளனர்.

இந்த பிரச்னைக்கு மத்தியில், இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் மூன்றாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. நடப்பாண்டின் முதல் அரையாண்டில் மஹிந்திரா நிறுவனம் 29,882 எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிட முடியாது.


Click it and Unblock the Notifications








