போட்டி பலமா இருக்கு... டாடாவுக்கு செம டஃப் குடுக்கும் ஹூண்டாய்... மாருதி நிலைமை என்ன இப்படி ஆயிருச்சு!
இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, ஹூண்டாய் நிறுவனம் செம டஃப் கொடுத்து வருகிறது.
Recommended Video
ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் பரிதாபமான நிலைக்கு சென்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜூலை மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-3 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது மிகவும் போட்டி நிறைந்த செக்மெண்ட் என்பது நம் அனைவருக்குமே தெரியும். இந்த கடுமையான போட்டியை சமாளித்து, டாடா நெக்ஸான் (Tata Nexon) முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்திய சந்தையில் சமீப காலமாகவே டாடா நெக்ஸான் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது என்பது இந்த கார் பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த சிறப்பான விற்பனை, நடப்பாண்டு ஜூலை மாதமும் தொடர்ந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் 14,214 நெக்ஸான் கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 10,287 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் டாடா நெக்ஸான் கார் விற்பனையில் 38.17 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரை ஐசி இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்த பட்டியலில் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் 12,000 வெனியூ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 8,185 ஆக மட்டுமே இருந்தது.

இதன் மூலம் ஹூண்டாய் வெனியூ கார் விற்பனையில் 46.61 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டாடா நெக்ஸான் காருக்கு, ஹூண்டாய் வெனியூ கடுமையான போட்டியை அளிக்க தொடங்கியிருப்பதை இந்த புள்ளி விபரங்கள் எடுத்து காட்டுகின்றன. இதற்கு ஹூண்டாய் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்தான் மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ காரின் 2022 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், ஹூண்டாய் வெனியூ கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) கார் 3வது இடத்தை பிடித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் 9,709 பிரெஸ்ஸா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 12,676 ஆக இருந்தது. இதன் காரணமாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் விற்பனை 23.41 சதவீதம் குறைந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனமும் பிரெஸ்ஸா காரின் புதிய 2022 மாடலை வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

ஆனால் ஹூண்டாய் வெனியூ காரை போல், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. மாறாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தற்போது நிலவி வரும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னைதான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் விற்பனை மிகவும் கடுமையாக குறைந்திருப்பதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு நிறுவனங்களும் தற்போது செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இது கார்களுக்கு மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். அதற்கு பற்றாக்குறை நிலவுவதால், கார்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கார்களை உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய முடிவதில்லை. எனவே முன்பதிவு செய்த கார்களை டெலிவரி பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது என்பதுடன், கார்களின் விற்பனையும் குறைந்துள்ளது. இந்த பிரச்னைதான், புதிய 2022 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள போதிலும், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்திருப்பதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








