இனிமேல் குறி தப்பாது... ஹூண்டாய்க்கு ஸ்கெட்ச் போட்ட டாடா... பக்காவா பிளான் பண்ணி வேலை செய்யறாங்க!
ஹூண்டாய் நிறுவனத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்கெட்ச் ஒன்றை போட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்திடம், சிறிய வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தை தவற விட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் 45,220 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் ஹூண்டாய் நிறுவனம் 48,001 கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. எனவே 2,781 கார்கள் என்ற சிறிய வித்தியாசத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தை தவற விட்டுள்ளது.
இந்திய சந்தையில் இரண்டாவது இடத்தை பிடிப்பது யார்? என்ற போட்டி சமீப காலமாகவே ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்களுக்கு இடையே மிக கடுமையாக இருந்து வருகிறது. கடந்த மாதம் ஹூண்டாய் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்து விட்ட நிலையில், வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடுமையான சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
இந்த செய்தியில், கடந்த அக்டோபர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-3 டாடா கார்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம். 3,2,1 என்ற வரிசையில் டாப்-3 கார்களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மாதாந்திர விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருப்பதற்கு இந்த கார்கள்தான் பெரிதும் உதவி செய்து வருகின்றன.
டாடா டியாகோ (Tata Tiago)
78 சதவீதம் என்ற பிரம்மாண்டமான வளர்ச்சியுடன், இந்த பட்டியலில் டாடா டியாகோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4,040 டாடா டியாகோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 7,187 ஆக உயர்ந்துள்ளது.
இது 78 சதவீத வளர்ச்சியாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (Tata Tiago EV) விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். முன்னதாக டாடா டியாகோ கார் ஏற்கனவே சிஎன்ஜி (CNG) வெர்ஷனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டாடா பன்ச் (Tata Punch)
இந்திய சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் அதிகமாக விற்பனை செய்த 2வது கார் இதுவாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் 8,453 பன்ச் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 10,982 ஆக உயர்ந்துள்ளது. இது 30 சதவீத வளர்ச்சியாகும்.
டாடா பன்ச் கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த சூழலில், டாடா நிறுவனம் பன்ச் காரின் கேமோ எடிசனை (Tata Punch Camo Edition) சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பன்ச் காரின் விற்பனை அதிகரித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
டாடா நெக்ஸான் (Tata Nexon)
இந்திய சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாடா கார் என்ற பெருமையை நெக்ஸான் பெற்றுள்ளது. டாடா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10,096 நெக்ஸான் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 13,767 ஆக உயர்ந்துள்ளது. இது 36 சதவீத வளர்ச்சியாகும்.
டாடா நெக்ஸான் கார், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய முதல் இந்திய கார் ஆகும். தற்போது ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் டாடா நெக்ஸான் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இதன் புதிய சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகிய புதிய கார்களும் விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது. இதேபோன்று பல்வேறு புதிய கார்களை அறிமுகம் செய்வதன் மூலம், அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு மிக கடுமையான போட்டியை ஏற்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








