அடுத்த டார்கெட் மாருதிதான்... ஹூண்டாயை கதற விடும் டாடா... இப்படி நடக்கும்னு யாரும் எதிர்பாத்திருக்க மாட்டாங்க!
ஹூண்டாய் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கதற விட்டு வருவது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. ஆனால் 2வது இடத்திற்கு சமீப காலமாக கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. 2வது இடத்தை பிடிப்பதற்கு டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் ஆகிய 2 நிறுவனங்களும் மல்லுக்கட்டி வருகின்றன.

சில சமயங்களில் டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தையும், சில சமயங்களில் ஹூண்டாய் 2வது இடத்தையும் பிடித்து வருகின்றன. கடந்த ஜூலை மாதம் ஹூண்டாய் நிறுவனம் 2வது இடத்தை பிடித்து விட்டது. டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் ஆகிய 2 நிறுவனங்களுக்கு இடையேயான வித்தியாசம் வெறும் 2,994 கார்கள் மட்டுமே!

ஹூண்டாய் நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் 50,500 கார்களை விற்பனை செய்துள்ளது. மறுபக்கம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 47,506 கார்களை விற்பனை செய்துள்ளது. 2 நிறுவனங்களுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 2,994 கார்கள் மட்டுமே. நூலிழையில்தான் இரண்டாவது இடத்தை டாடா மோட்டார்ஸ் தவற விட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த அளவிற்கு மிக கடுமையான போட்டியை வழங்கி வருவதற்கு 3 கார்கள்தான் மிகவும் முக்கியமான கார்களாக பார்க்கப்படுகிறது. அவை நெக்ஸான், பன்ச் மற்றும் அல்ட்ராஸ் ஆகியவை ஆகும். இந்த 3 கார்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்பான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் (Tata Nexon)
இந்தியாவில் நடப்பாண்டு ஜூலை மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாடா கார் இதுதான். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் ஒட்டுமொத்தமாக 14,214 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 10,287 நெக்ஸான் கார்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இதன் மூலமாக டாடா நெக்ஸான் கார் விற்பனையில் 38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நெக்ஸான் காரின் ஐசி இன்ஜின் மாடலுக்கு மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கு இந்திய சந்தையில் அமோகமான வரவேற்பு உள்ளது. டாடா நெக்ஸான் ஐசி இன்ஜின் கார், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ காருடன் நேருக்கு நேராக மோதி வருகிறது.

டாடா பன்ச் (Tata Punch)
இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜூலை மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் பட்டியலில் பன்ச் 2வது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூலை மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 11,007 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிட முடியாது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய சிறப்பான விற்பனை வளர்ச்சிக்கு, பன்ச் கார் மிக முக்கியமான காரணமாக திகழ்கிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே வாடிக்கையாளர்கள் இந்த காருக்கு பிரம்மாண்டமான வரவேற்பை வழங்கி வருகின்றனர்.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz)
இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜூலை மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் பட்டியலில் அல்ட்ராஸ் 3வது இடத்தில் உள்ளது. இது பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 6,980 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கையானது, நடப்பாண்டு ஜூலையில் 6,159 ஆக சரிந்துள்ளது.

இது 12 சதவீத வீழ்ச்சியாகும். டாடா அல்ட்ராஸ் கார் விற்பனையில் சிறிய அளவில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தாலும் கூட, இது சிறப்பான விற்பனை எண்ணிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த மூன்று கார்களுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியவை.

இந்த 3 கார்களின் விற்பனையும் மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு, டாடா மோட்டார்ஸ் மிகவும் கடுமையான போட்டியை வழங்கி வருவதற்கு இந்த பாதுகாப்பு ரேட்டிங்குகள் முக்கியமான காரணம் என்றாலும், அது மிகையல்ல.


Click it and Unblock the Notifications