விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா கார்கள்... நம்பவே முடியாத அளவுக்கு சேல்ஸ் அதிகம் ஆயிருக்குங்க!
மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் விற்பனையில் கெத்து காட்டி வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் கடந்த செப்டம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களின் பட்டியல் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) கார் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் வெறும் 8,193 க்ரெட்டா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 12,866 ஆக உயர்ந்துள்ளது. இது 57 சதவீத வளர்ச்சியாகும். ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் க்ரெட்டா காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மாடல் நடப்பாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ விற்பனைக்கு வரலாம்.

ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின், ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த பட்டியலில் கியா செல்டோஸ் (Kia Seltos) கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9,583 ஆக இருந்த கியா செல்டோஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 11,000 ஆக உயர்ந்துள்ளது.

இது 15 சதவீத வளர்ச்சியாகும். ஹூண்டாய் நிறுவனத்தை போல், கியா நிறுவனமும் செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. கியா செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் வெகு விரைவிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2,588 ஆக இருந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 9,536 ஆக உயர்ந்துள்ளது. இது 268 சதவீத வளர்ச்சியாகும்.

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா வெகு சமீபத்தில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். தனது புதிய காருக்கு பொருத்தமான பெயரை சூட்டும்படி அவர் சமூக வலை தளங்கள் மூலமாக நெட்டிசன்களுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்.

மஹிந்திரா ஸ்கார்பியோ காரை போலவே, மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரும் விற்பனையில் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,370 ஆக இருந்த எக்ஸ்யூவி700 காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 6,063 ஆக உயர்ந்துள்ளது. இது 343 சதவீத வளர்ச்சியாகும்.

மஹிந்திரா நிறுவனத்தின் 2 தயாரிப்புகளும் போட்டியாளர்களை பிரம்மிக்க வைக்கும் வகையில் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. வரும் மாதங்களில் இந்த 2 கார்களின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. ஏனென்றால் இந்த 2 கார்களுக்கும் மிகப்பெரிய எண்ணிக்கையில் முன்பதிவுகள் குவிந்துள்ளன.

அந்த வாடிக்கையாளர்களுக்கு எல்லாம் மஹிந்திரா நிறுவனம் கார்களை டெலிவரி செய்ய வேண்டும். அப்படியானால் இந்த 2 கார்களின் விற்பனை எண்ணிக்கையும் உயரக்கூடிய வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) கார் ஐந்தாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 4,769 க்ராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்துள்ளது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் கடந்த செப்டம்பர் மாதம்தான் விற்பனைக்கே கொண்டு வரப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட முடியாது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கும் மிகப்பெரிய எண்ணிக்கையில் முன்பதிவுகள் குவிந்துள்ளதால், வரும் மாதங்களில் இதன் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications








