கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள்... ஹூண்டாய் கிரெட்டா முதலிடம்!
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடப்பாண்டு ஜூன் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், ஹூண்டாய் கிரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 9,941 கிரெட்டா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 13,790 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பதுடன், விற்பனையில் 38.7 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்து ஹூண்டாய் கிரெட்டா அசத்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் அடுத்த சில மாதங்களில், கிரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அப்போது ஹூண்டாய் கிரெட்டா காரின் விற்பனை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கிடையே இந்த பட்டியலில் கியா செல்டோஸ் கார், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் கியா நிறுவனம் 8,549 செல்டோஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 8,388 ஆக சரிந்துள்ளது. இது 2 சதவீத வீழ்ச்சியாகும்.

ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதை போலவே, கியா நிறுவனமும் கூடிய விரைவில், இந்திய சந்தையில் செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அப்போது கியா செல்டோஸ் காரின் விற்பனையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதற்கிடையே இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் மஹிந்திரா நிறுவனம் 6,022 எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த காரின் விலை மற்றும் காத்திருப்பு காலம் ஆகிய விஷயங்களை ஒப்படுகையில், இது மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையாகும்.

இந்த காரின் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிட இயலாது. ஏனெனில் அந்த சமயத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்படவில்லை. அதாவது கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் மஹிந்திரா நிறுவனம், எக்ஸ்யூவி700 காரின் விலைகளை அறிவித்தது.

எனவே 2021ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் இந்த காரின் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட இயலாது. இந்த பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்பியோ நான்காவது இடத்தை பிடித்துள்ளது.மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் 4,160 ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 4,131 ஆக சரிந்துள்ளது. இது 0.7 சதவீத வீழ்ச்சியாகும்.

மஹிந்திரா நிறுவனம் வெகு சமீபத்தில்தான் ஸ்கார்பியோ-என் என்ற புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புத்தம் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே வரும் மாதங்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

புத்தம் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம். இந்த கார் எங்களை பல விதங்களிலும் கவர்ந்தது. வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாலும், செமி கண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாலும், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காருக்கு காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கும் இதே இரண்டு காரணங்களால் காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த பட்டியலில் டாடா ஹாரியர் கார் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 2,041 ஹாரியர் கார்களை விற்பனை செய்திருந்தது.

ஆனால் நடப்பாண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 3,015 ஹாரியர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் டாடா ஹாரியர் கார் விற்பனையில் 48 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு விரைவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹாரியர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இந்த காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








