உலகளவில் தற்சமயம் ஆற்றல்மிக்க எஸ்யூவி கார்கள் இவைதான்!! லம்போர்கினி உருஸ் முதல் டோட்ஜ் டுராங்கோ வரையில்
செடான் கார்களில் இருந்து, நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களுக்கான ட்ரெண்ட் கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. இதன் காரணமாகவே செடான் கார்களை காட்டிலும் எஸ்யூவி கார்களின் விற்பனை நம் நாட்டில் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலை நமது இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுவதிலும் உள்ளது.

சர்வதேச சந்தைகளில் செயல்திறன்மிக்க சூப்பர் கார்களும், ஹைப்பர் கார்களும் கூட எஸ்யூவி தோற்றத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் மற்ற உலக நாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள 5 ஆற்றல்மிக்க எஸ்யூவி கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

லம்போர்கினி உருஸ்
நமது இந்தியாவிலும் விற்பனையில் உள்ள ஆற்றல்மிக்க எஸ்யூவி காரில் இருந்து ஆரம்பிப்போம். பிரபலமான இத்தாலியன் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி அதன் உருஸ் எஸ்யூவி காரில் 4 லிட்டர் இரட்டை-டர்போ வி8 என்ஜினை வழங்கி வருகிறது.

அதிகப்பட்சமாக 650 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் மூலமாக உருஸ் காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்ட முடிகிறது. அதுவே 200kmph வேகத்தை அடைய 12.8 வினாடிகளை எடுத்து கொள்ளும் உருஸின் டாப்-ஸ்பீடு மணிக்கு 305கிமீ ஆகும். உருஸ் எஸ்யூவி காரின் மொத்த எடை 2.2 டன்கள் ஆகும்.

அஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ்707
அஸ்டன் மார்டின் பிராண்டில் இருந்து டிபிஎக்ஸ் எஸ்யூவி மாடல் எப்போதில் இருந்தோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆற்றல்மிக்க எஸ்யூவி கார் என்று பார்த்தால், இதன் சமீபத்திய டிபிஎக்ஸ்707 (707 பிஎஸ்) வெர்சனை தான் சொல்ல வேண்டும். இதிலிலும் 4-லிட்டர் இரட்டை-டர்போ வி8 என்ஜினே பொருத்தப்படுகிறது.

ஆனால் இதன் மூலமாக அதிகப்பட்சமாக 707 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க் திறனை பெற முடியும். இந்த டர்போசார்ஜர் என்ஜின் உடன் புதிய 9-ஸ்பீடு ஈரமான க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இவற்றின் உதவியுடன் டிபிஎக்ஸ்707 காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டிவிடலாம். இதன் டாப் ஸ்பீடு 319kmph ஆகும்.

பெண்ட்லீ பெண்டைகா ஸ்பீடு
பொதுவாகவே பெண்ட்லீயின் பெண்டைகா மாடல் ஆற்றல்மிக்கதாக பார்க்க முடிகிறது. இருப்பினும் இதில் கூடுதல் வேகமான பெண்டைகா ஸ்பீடு என்கிற வெர்சன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அதிகப்பட்சமாக 635 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய அளவில் பெரிய 6-லிட்டர் இரட்டை-டர்போ டபிள்யூ12 என்ஜின் பொருத்தப்படுகிறது.

இதனுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பு இணைக்கப்படுகிறது. இவற்றின் மூலமாக 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய பெண்டைகா ஸ்பீடு காரின் டாப் ஸ்பீடு 306kmph ஆகும்.

டோட்ஜ் டுராங்கோ எஸ்ஆர்டி ஹெல்கேட்
இந்த வரிசையிலேயே, அதாவது உலகத்திலேயே தற்சமயம் ஆற்றல்மிக்க எஸ்யூவி கார் என்று பார்த்தால், அது டோட்ஜ் டுராங்கோ எஸ்ஆர்டி ஹெல்கேட் தான். ஏனெனில் இதில் பொருத்தப்படும் 6.2 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு HEMI ஹெல்கேட் வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 710 பிஎஸ் மற்றும் 875 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இதனுடன் இணைக்கப்படும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் காரின் அனைத்து நான்கு சக்கரங்களுக்கும் ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த அளவில்-பெரிய எஸ்யூவி காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 3.5 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த டோட்ஜ் காரின் டாப் ஸ்பீடு 290kmph ஆகும்.

போர்ஷே கேயேனே டர்போ எஸ் இ-ஹைப்ரீட்
உலகளவில் பிரபலமான கேயேனே எஸ்யூவி காரின் ரேஸ் எடிசனாக கேயேனே டர்போ ஜிடி அறிமுகப்படுத்தப்பட்டாலும், இதனை காட்டிலும் ஆற்றல்மிக்கதாக டர்போ எஸ் இ-ஹைப்ரீட் கார் விளங்குகிறது. இதில் பொருத்தப்படுகின்ற 4-லிட்டர் இரட்டை-டர்போ வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 541 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த என்ஜின் உடன் 134 பிஎஸ் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. இதன் மூலமாக மொத்தமாக 670 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க் திறன் வரையில் பெறலாம். 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த போர்ஷே எஸ்யூவி காரின் டாப்-ஸ்பீடு 294kmph ஆகும்.


Click it and Unblock the Notifications








