இந்தியாவின் 5 செயல்திறன்மிக்க, தரமான காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்...!! இதோ
நம் இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். இதனாலேயே இந்த கார்கள் பிரிவு ஆனது கிட்டத்தட்ட அனைத்து முன்னணி பிராண்ட்களின் தயாரிப்புகளுடன் போட்டிமிகுந்ததாக உள்ளது. அவற்றில் சிறந்த 5 செயல்திறன்மிக்க மாடல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா நெக்ஸான்
நிச்சயமாக காம்பெக்ட் எஸ்யூவி கார்களை பற்றி பார்க்கும்போது டாடா நெக்ஸானையே முதலாவதாக பார்க்க வேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு கடந்த சில மாதங்களில் நெக்ஸான் கார்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதிலிலும் குறிப்பாக, கடந்த 2022 ஏப்ரலில் 13,471 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2021 ஏப்ரலை காட்டிலும் 94% அதிகமாகும்.

டாடா மோட்டார்ஸின் இந்த வெற்றிக்கரமான மாடல் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. நெக்ஸானில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் ரெவோட்ரான் டர்போ-பெட்ரோல் & 1.5 லிட்டர் 4-சிலிண்டர் ரெவோடார்க் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் எலக்ட்ரிக் வெர்சனிலும் நெக்ஸான் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300
மஹிந்திராவின் தரமான காம்பெக்ட் எஸ்யூவி கார். பெட்ரோல் & டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 110 பிஎஸ் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

மறுப்பக்கம், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 117 பிஎஸ் மற்றும் 300 என்எம் டாட்க் திறனை வெளிப்படுத்துகிறது. டாடா நெக்ஸானை போல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடலும் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை பெற்று பாதுகாப்பான பயணிகள் காராக உலா வருகிறது.

கியா சொனெட்
கியா பிராண்டில் இருந்து இந்திய சந்தையில் களமிறக்கப்பட்ட 3வது தயாரிப்பு வாகனம். நம் நாட்டில் மொத்தம் 3 விதமான என்ஜின் தேர்வுகளில் சொனெட் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்பவை இந்த 3 என்ஜின் தேர்வுகளாகும்.

இதில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 120 பிஎஸ் & 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 2022ஆம் ஆண்டிற்கு அப்டேட் செய்யப்பட்ட கியா சொனெட் மாடல் சமீபத்தில், கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை முந்தைய விலைகளை காட்டிலும் ரூ.30,000 வரையில் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ
கியா சொனெட்டின் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கும் ஹூண்டாய் காம்பெக்ட் எஸ்யூவி கார். இதன்படி வென்யூவிலும் 3 விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் பணிகளில் தற்சமயம் ஹூண்டாய் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், முக்கியமான மாற்றங்கள் அனைத்தும் காரின் முன்பக்கத்திலேயே வழங்கப்பட உள்ளன.

தென்கொரியாவை தாண்டி, புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை மாதிரிகள் இந்தியாவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் இதன் அறிமுகத்தை நடப்பு 2022ஆம் ஆண்டிற்குள்ளாக எதிர்பார்க்கப்படுகிறது. வென்யூ ஃபேஸ்லிஃப்ட்டை தொடர்ந்து, வென்யூ மாடலின் என்-லைன் வேரியண்ட்டையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

ரெனால்ட் கிகர்
ரெனால்ட் கிகர், பெரும்பாலானோர் இந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடலை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். நிஸான் மேக்னைட் உடன் பாகங்களை பகிர்ந்து உருவாக்கப்படும் கிகரில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என 2 விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதில் டர்போ-பெட்ரோல் என்ஜின் 100 பிஎஸ் & 160 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 2022 கிகர் மாடல் கடந்த மார்ச் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.5.84 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய முக்கியமான அப்டேட்டாக 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் ரெனால்ட் கிகருக்கு வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








