இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பாக்கல... முந்துகிறது மாருதி... 5 ஸ்டார் வாங்கிய டாடா கார் ரொம்ப 'டல்' ஆயிருச்சு!
மாருதி காரின் விற்பனை தூள் கிளப்பும் நிலையில், பாதுகாப்பான டாடா கார் 'டல்' அடிக்கிறது. இது தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்த பலேனோ கார்களின் எண்ணிக்கை வெறும் 8,077 மட்டும்தான்.

ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 19,369 பலேனோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் மாருதி சுஸுகி பலேனோ கார் விற்பனையில் 140 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு அக்டோபர் மாதம் பலேனோ காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய சிஎன்ஜி வெர்ஷனின் வருகைக்கு பின்பு மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 5,153 ஐ20 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது.

ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 7,275 ஆக உயர்ந்துள்ளது. இது 41 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5,772 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 5,227 ஆக குறைந்துள்ளது. இது 9 சதவீத வீழ்ச்சி ஆகும். டாடா அல்ட்ராஸ் காரானது, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய பாதுகாப்பான கார் ஆகும். இன்னும் சொல்லப்போனால் இந்த செக்மெண்ட்டில் இந்த பெருமையை பெற்றுள்ள ஒரே ஒரு கார் இது மட்டுமே.

இருந்தாலும் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை சரிவடைந்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் மாதங்களில் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் வெர்ஷன் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்டியலில் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) கார், நான்காவது இடத்தை பிடித்துள்ளது. 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டொயோட்டா நிறுவனம் வெறும் 1,764 க்ளான்சா கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 3,528 ஆக உயர்ந்துள்ளது. இது 100 சதவீத வளர்ச்சியாகும்.

மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா கார் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் ரெகுலர் வாசகர்களுக்கு தெரியும். மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ சிஎன்ஜி கார் விற்பனைக்கு வந்த பிறகு, டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி வெர்ஷனும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது நடப்பு அக்டோபர் மாதத்திலேயே டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி வெர்ஷனும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இந்த பட்டியலில் ஹோண்டா ஜாஸ் (Honda Jazz) கார் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 667 இருந்த ஹோண்டா ஜாஸ் காரின் விற்பனை எண்ணிக்கையானது, நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 618 ஆக குறைந்துள்ளது. இது 7 சதவீத வீழ்ச்சியாகும். இந்த டாப்-5 பட்டியலில், ஹோண்டா ஜாஸ் மற்றும் டாடா அல்ட்ராஸ் ஆகிய 2 கார்கள் மட்டும்தான் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








