டாடா நெக்ஸான் எஸ்யூவி காரை இத்தனை பேர் வாங்குகிறார்களா!! இந்தியாவின் நம்பர்.1 எஸ்யூவி!
கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் 9 எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை அட்டவணையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

செடான் கார்களில் இருந்து கடந்த சில வருடங்களில் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் எஸ்யூவி கார்களுக்கு மாறிவிட்டனர். இதனால் தற்போது செடான், ஹேட்ச்பேக் என மற்ற கார்களை காட்டிலும் எஸ்யூவி உடலமைப்பை கொண்ட கார்களே அதிகம் விற்பனையாகுகின்றன. இது தற்போது ட்ரெண்ட் போல் உள்ளது.

இதனால் எஸ்யூவி கார்கள் பிரிவில் விற்பனையில் முன்னணி பிராண்ட்கள் கடுமையாக போட்டிப்போட்டு வருகின்றன. முதலில் மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸாவின் கை ஓங்கி இருந்தது. இதற்கு நேரெதிர் போட்டி மாடலாக ஹூண்டாய் வென்யூ விளங்கிவந்தது. அதன்பின் கடந்த 2020இல் ஹூண்டாய் க்ரெட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் க்ரெட்டாவின் பக்கம் சாய்ந்தனர்.

ஆனால் இந்திய எஸ்யூவி கார்கள் பிரிவின் தற்போதைய ஆதிக்கம் டாடா நெக்ஸானிடம் உள்ளது. இந்த டாப்-9 லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ள நெக்ஸான் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் 12,259 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெறும் 7,929 நெக்ஸான் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த டாடா காம்பெக்ட் எஸ்யூவி காரின் விற்பனை சுமார் 55% அதிகரித்துள்ளது.

உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளின்படி மிகவும் பாதுகாப்பான டாடா கார்களுள் ஒன்றாக விளங்கும் நெக்ஸான் பெட்ரோல் & டீசல் என்ஜின் உடன் மட்டுமின்றி, எலக்ட்ரிக் வெர்சனிலும் கிடைப்பது கூடுதல் சிறப்பு. இந்த லிஸ்ட்டில் நெக்ஸானிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் வென்யூ 10,212 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.
| Rank | Model | Feb'22 | Feb'21 | Growth (%) |
| 1 | Tata Nexon | 12,259 | 7,929 | 55 |
| 2 | Hyundai Venue | 10,212 | 11,224 | -9 |
| 3 | Hyundai Creta | 9,606 | 12,428 | -23 |
| 4 | Tata Punch | 9,592 | 0 | - |
| 5 | Maruti Vitara Brezza | 9,256 | 11,585 | -20 |
| 6 | Kia Seltos | 6,575 | 8,305 | -21 |
| 7 | Kia Sonet | 6,154 | 7,997 | -23 |
| 8 | Mahindra Thar | 5,072 | 2,842 | 78 |
| 9 | Mahindra XUV300 | 4,511 | 3,174 | 42 |

வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி காரின் இந்த கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கை சிறப்பான எண்ணிக்கை தான் என்றாலும், 2021 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 9% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 11,224 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 3வது இடத்திலும் ஹூண்டாய் மோட்டார்ஸின் எஸ்யூவி காராக க்ரெட்டா உள்ளது. ஆனால் 2021 பிப்ரவரி மாதத்தில் வென்யூ மட்டுமின்றி மற்ற அனைத்து எஸ்யூவி கார்களையும் முந்திக்கொண்டு க்ரெட்டா தான் முதலிடத்தில் இருந்தது.

2021 பிப்ரவரியில் கிட்டத்தட்ட 12,428 க்ரெட்டா எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் வெறும் 9,606 க்ரெட்டா கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் க்ரெட்டா கார்களின் விற்பனை 23 சதவீதம் குறைந்துள்ளது. க்ரெட்டாவை தொடர்ந்து நான்காவது இடத்தை மற்றொரு டாடா எஸ்யூவி காராக பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி மாடல் பிடித்துள்ளது.

கடந்த மாதத்தில் மொத்தம் 9,592 பஞ்ச் கார்கள் விற்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸா இந்த முறை ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் 2021 பிப்ரவரியில் 11,585 விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த மாருதி காம்பெக்ட் எஸ்யூவி காரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 9,256 ஆக பதிவாகியுள்ளது. இந்த வகையில் விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் விற்பனை 20% குறைந்துள்ளது.

இந்த முதல் 5 மாடல்களுக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ளவைகளுக்கு சற்று பெரிய இடைவெளி உள்ளது. ஏனெனில் இந்த வரிசையில் 6வது இடத்தை தனதாக்கியுள்ள கியா செல்டோஸ் கடந்த மாதத்தில் 6,154 யூனிட்களே விற்பனையை பதிவு செய்துள்ளது. ஆனால் 2021 பிப்ரவரியில் செல்டோஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கை 8,300 ஆக பதிவாகி இருந்தது. இதேபோல் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஏறக்குறைய 8 ஆயிரம் யூனிட்கள் விற்கப்பட்டு இருந்த சொனெட் கடந்த மாதத்தில் 6,154 யூனிட்களே விற்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த டாப்-9 லிஸ்ட்டில் இதற்கடுத்து கடைசி இரு இடங்களில் உள்ள மஹிந்திரா எஸ்யூவி வாகனங்களான தார் மற்றும் எக்ஸ்யூவி300 -இன் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 5,072 மற்றும் 4,511 ஆகும். ஆனால் இவற்றின் 2021 பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 2,842 மற்றும் 3,174 மட்டுமே ஆகும். இதில் குறிப்பாக தார் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களின் விற்பனை சுமார் 78 சதவீதம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








