ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இந்த கார்களை அடிச்சிக்க ஆளே இல்ல... டாப் ஐந்து ஹைபிரிட் கார்களின் பட்டியல்!
இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் டாப் ஐந்து ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்களின் பட்டியலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் தகவலைக் காணலாம்.

இந்தியா மிக வேகமாக பசுமை இயக்கத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. அதாவது, சுற்று சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்தாத வாகன பயன்பாட்டிற்கு வேகமாக மாறி வருகின்றது. இதன் விளைவாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பசுமைா வாகனங்களின் இயக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

குறிப்பாக, மின்சார வாகனங்கள் மற்றும் சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதேபோல், ஹைபிரிட் / பிளக்-இன் ஹைபிரிட் கார்களின் பயன்பாடும் அதிகரித்துக் காணப்படுகின்றது. மின்சாரம் மற்றும் எரிபொருள் மோட்டார் இரண்டிலும் இயங்கக் கூடிய வாகனங்களே ஹைபிரிட் வாகனங்கள் என அழைக்கப்படுகின்றது.

இவை எரிபொருள் சிக்கனம், அதிக மைலேஜ் மற்றும் குறைவான மாசு வெளிப்பாடு ஆகிய சிறப்பு வசதிகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஹைபிரிட் தொழில்நுட்பமானது விலையுயர்ந்த அல்லது ஆடம்பர ரக கார் மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.

அதேநேரத்தில், சில குறைந்த விலை கார் மாடல்களில் மாருதி சுஸுகி நிறுவனம் மைல்டு ஹைபிரிட் வசதியை வழங்கி வருகின்றது. இருப்பினும், ப்யூரான ஹைபிரிட் தொழில்நுட்ப வசதி குறிப்பிட்ட சில கார் மாடல்களில் மட்டுமே வழங்கப்படுகின்றது. அவற்றில் மிக முக்கியமான ஐந்து கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஹோண்டா சிட்டி இ:எச்இவி (Honda City e:HEV)
மிக ஸ்ட்ராங்கான ஹைபிரிட் தொழில்நுட்ப வசதியுடன் ஹோண்டா சிட்டி இ:எச்இவி விற்பனைக்கு வந்திருக்கின்றது. இக்காரில் இரண்டு மின் மோட்டார்கள், இதற்கு தேவையான மின்சார திறனை வழங்குவதற்காக லித்தியம் அயன் பேட்டரி பேக் மற்றும் ஓர் 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதில் வழங்கப்பட்டிருக்கும் இரண்டில் ஒரு மின் மோட்டார் ஸ்டார்டர் ஜெனரேட்டராகவும், மற்றொன்று முன் வீலுக்கு இயக்க அனுபவத்தையும் வழங்கும்.

இத்துடன், சேர்ந்து பெட்ரோல் மோட்டாரும் கூடுதல் அதி வேக இழுவை திறனை வழங்கும். ஒட்டுமொத்தமாக 126 பிஎஸ் பவரை இரு மோட்டார்களும் இணைத்து வெளியேற்றும். இத்தகைய சிறப்பு வசதியுடனேயே சிட்டி இ:எச்இவி ஹைபிரிட் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 19.50 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா கேம்ரி (Toyota Camry)
டொயோட்டா கேம்ரி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹைபிரிட் வசதிக் கொண்ட கார் மாடல்களில் இதுவும் ஒன்று. இக்காரில் ஹைபிரிட் வசதிக் கொண்ட 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவிடி கியர்பாக்ஸ் உடன் இயங்கும் இந்த மோட்டார் அதிகபட்சமாக 218 பிஎஸ் வரை சக்தியை வெளியேற்றும்.

இக்காரில் நிக்கல் மெட்டல் ஹைட்ரைட் செய்யப்பட்ட பேட்டரி மற்றும் முன் பக்க வீலுக்கு இயக்கம் திறனை வழங்கக் கூடிய ஆக்சில் உள்ளிட்ட ஹைபிரிட் சிஸ்டமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த மின் மோட்டார் மற்றும் 2.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் ஆகியவை இணைந்தே 218 பிஎஸ் பவரை வெளியேற்றுகின்றது.

பிஎம்டபிள்யூ 745 எல்இ (BMW 745 Le)
7 சீரிஸ் கார் மாடலையே பிஎம்டபிள்யூ நிறுவனம் பிளக்-இன் ஹைபிரிட் வசதியுடன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்குகின்றது. இ-டிரைவ் மோட்டார் மற்றும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் ஆகியவை இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. இவ்விரு மோட்டார்களும் இணைந்து 394 பிஎஸ் மற்றும் 600 என்எம் டார்க்கை வெளியேற்றும். இக்காரில் இடம் பெற்றிருக்கும் பேட்டரியை வீட்டு பிளக் பாயிண்டைக் கொண்டு சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோல் எஞ்ஜின் பயன்பாட்டைக் குறைக்க இந்த வசதி உதவியாக இருக்கும்.

லெக்சஸ் என்எக்ஸ் 350எச் (Lexus NX 350h)
இது ஓர் எஸ்யூவி கார் மாடலாகும். இக்கார் 64.90 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றது. ஐந்து பேர் வரை இக்காரில் அமர்ந்து பயணிக்க முடியும். லெக்சஸ் என்எக்ஸ் 350எச் சொகுசு காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார், சிவிடி கியர்பாக்ஸ் வசதியுடனும், இரு மின்சார மோட்டார்களும் வழங்கப்பட்டுள்ளன. இரண்டும் சேர்ந்து சுமார் 243 பிஎஸ் பவர் வரை வெளியேற்றும்.

வால்வோ எக்ஸ்சி 90 ரீசார்ஜ் (Volvo XC90 Recharge)
வால்வோ எக்ஸ்சி90 ரீசார்ஜ் ஓர் 7 இருக்கைகள் வசதிக் கொண்ட எஸ்யூவி ரக காராகும். சொகுசு வசதிகளுக்கு சற்றும் குறைவில்லாத ஹைபிரிட் காராக இது இருக்கின்றது. இக்காரில் குறைவான மாசுபாட்டை வெளியேற்றம் என்பதற்காக சூப்பர்சார்ஜட் மற்றும் டர்போசார்ஜட் மோட்டாருடன் சேர்த்து எலெக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார்கள் இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 407 பிஎஸ் பவரை வெளியேற்றும். இக்காரின் பிளக்-இன் ஹைபிரிட் வசதியைக் கொண்டு பெட்ரோலே இல்லாமல் 40 கிமீ வரை பயணிக்க முடியும். காருக்குள் இருக்கும் வழங்கப்பட்டிருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்வதன் வாயிலாக இந்த பயண வசதியைப் பெற முடியும்.


Click it and Unblock the Notifications








