விற்பனையில் மாருதி கார்களுக்கு மத்தியில், ஒரே ஒரு டாடா காராக... நெக்ஸான்!! விற்பனை சுமார் 68% அதிகரிப்பு!
கடந்த 2022 ஜனவரி மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

செடான் கார்களில் இருந்து வாடிக்கையாளர்களின் இரசனை எஸ்யூவி கார்களை நோக்கி நகர ஆரம்பிப்பதற்கு இடையில் தோன்றிய ட்ரெண்ட் தான் ஹேட்ச்பேக் எனலாம். எஸ்யூவி கார்களை வாங்க விரும்புவதை போல், ஹேட்ச்பேக் கார்களையும் வாங்க ஒரு கூட்டம் இருக்க தான் செய்கிறது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகுபவை ஹேட்ச்பேக் கார்கள் தான் என்றால் நம்ப முடிகிறது. ஆம், இந்தியாவில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகியின் தயாரிப்புகளான வேகன்ஆர், ஸ்விஃப்ட் மற்றும் ஆல்டோவிற்கு இடையே தான் பெரும்பாலான மாதங்களில் முதலிடத்திற்கான போட்டி இருக்கும்.

இவை மூன்றும் ஹேட்ச்பேக் ரக கார்களாகும். கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களில், அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் 25 கார்கள் மட்டுமே கிட்டத்தட்ட 77 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை கொண்டுள்ளன. கார்கள் விற்பனையில் எப்போதும் மாருதி சுஸுகியின் பங்கே அதிகமாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

இந்த டாப்-25 கார்களிலும் 10 மாருதி சுஸுகி கார்களும், 4 டாடா & ஹூண்டாய் கார்களும், 3 மஹிந்திரா கார்களும், 2 ஹோண்டா & கியா கார்களும் அடங்குகின்றன. இந்த முதல் 25 கார்களின் விற்பனை எண்ணிக்கையில் மாருதி சுஸுகி கார்களின் விற்பனை எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 52 சதவீதமாகும். கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக மாருதி சுஸுகியின் உயரமான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஜனவரியில் மொத்தம் 20,334 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இரண்டாவது இடத்திலும் மாருதி சுஸுகி தயாரிப்பாக ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் 19,108 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் அதுவே 2021 ஜனவரியில் இவை இரண்டின் விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக 17 ஆயிரங்கள் என்ற அளவிலேயே இருந்தது.

இந்த வகையில் மாருதி சுஸுகி வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை 2021 ஜனவரி உடன் ஒப்பீடுகையில் கடந்த மாதத்தில் முறையே 18% மற்றும் 11% அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் மூன்றாவது இடத்திலும் மாருதி சுஸுகி காராக டிசைர் உள்ளது. ஆனால் இந்த செடான் காரின் விற்பனை முந்தைய ஆண்டு ஜனவரியை காட்டிலும் 1% குறைந்துள்ளது.

2021 ஜனவரியில் 15,125 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 14,967 டிசைர் கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. நான்காவது இடத்தில் நம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி கார் உள்ளது. சமீப மாதங்களாக மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் இந்த டாடா எஸ்யூவி கார் கடந்த மாதத்தில் மொத்தம் 13,816 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது 2021 ஜனவரி உடன் ஒப்பீடுகையில் சுமார் 68% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 8,225 நெக்ஸான் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டிருக்கும் எஸ்யூவி கார்களுக்கான சந்தையை டாடா நெக்ஸான் சமீப காலமாக சரியாக பயன்படுத்தி கொண்டு வருகிறது. நெக்ஸான் தான் இந்தியாவில் தற்போதைக்கு அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

மாருதியின் மற்றொரு பிரபலமான ஹேட்ச்பேக் காரான ஆல்டோ 12,342 யூனிட்களின் விற்பனை உடன் இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் 2021 ஜனவரியில் இதனை காட்டிலும் 32% அதிகமாக 18,260 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த ஆல்டோ அப்போது இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருந்தது. இதற்கடுத்து இந்தியாவின் நம்பர்.01 எம்பிவி காரான மாருதி சுஸுகி எர்டிகா இந்த லிஸ்ட்டில் 6வது இடத்தில் உள்ளது.

கடந்த ஜனவரியில் 2021 ஜனவரியை காட்டிலும் 24% அதிகமாக 11,847 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7வது மற்றும் 8வது இடங்களில் பிரபலமான எஸ்யூவி கார்களான கியா செல்டோஸ் (11,483 யூனிட்கள்) & ஹூண்டாய் வென்யூ (11,377 யூனிட்கள்) உள்ளன. இதில் செல்டோஸின் விற்பனை 2021 ஜனவரியை காட்டிலும் 16% அதிகரித்துள்ளது என்றாலும், வென்யூ கார்களின் விற்பனை 3% குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








