இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனையை பதிவு செய்த டொயோட்டா! மாருதியின் கார்கள் இல்லைனா இது சாத்தியமே ஆகியிருக்காது!
டொயோட்டா (Toyota) நிறுவனம் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர விற்பனை பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா இதுவரை இல்லாத அளவில் நடந்து முடிந்த 2022 ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையில் தங்களின் புதிய வாகனங்கள் விற்பனையாகியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 19,693 யூனிட் வாகனங்களையே விற்பனைச் செய்திருக்கின்றது.

இந்த விற்பனை எண்ணிக்கை 2021ம் ஆண்டின் ஜூலை மாதத்தைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. 13,105 யூனிட்டுகள் மட்டுமே அப்போது விற்பனையாகியிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் தற்போதைய விற்பனை வளர்ச்சிக்கு ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல்களே காரணமாக உள்ளது.

நிறுவனம் மாருதி சுஸுகியின் பலினோ காரை கிளான்ஸா என்கிற பெயரிலும், விட்டாரா ப்ரெஸ்ஸாவை அர்பன் க்ரூஸர் என்கிற பெயரிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கே இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இரண்டும் பிரீமியம் தர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர நிறுவனத்தின் சொந்த தயாரிப்புகளான இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் மற்றும் லெஜெண்டர் ஆகிய கார் மாடல்களும் நல்ல எண்ணிக்கையில் விற்பனையாகியிருக்கின்றன. அதாவது, ரீபேட்ஜ் மாடல்களுக்கு மட்டுமின்றி டொயோட்டா பிராண்டின் தயாரிப்புகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது. இதன் விளைவாகவே நிறுவனத்தால் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஜூலையில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனைச் செய்ய முடிந்திருக்கின்றது.

டொயோட்டா நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எனும் எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்கு தற்போது கார் பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், அடுத்து வரும் மாதங்களிலும் நிறுவனம் விற்பனை வளர்ச்சியைக் காணும் என யூகிக்க முடிகின்றது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இந்திய சந்தையில் இருவிதமான ஹைரிபிரிட் சிஸ்டத் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் சிஸ்டம் ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இளைஞர்களைக் கவரும் விதமாக பன்முக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பிரீமியம் அம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது.

அந்தவகையில், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஒயர்லெஸ் சார்ஜர், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஹெட்ஸ்-அப் திரை, கார் இணைப்பு தொழில்நுட்பம், சிரி மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட மிக மிக சூப்பரான சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் டொயோட்டா வழங்க இருக்கின்றது.

இந்த காருக்கு ஏற்கனவே ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. வெகு விரைவில் இந்தியாவின் பண்டிகைத் தினங்களை அலங்கரிக்கும் வகையில் அது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த நிலையிலேயே இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் டொயோட்டா கார்கள் விற்பனையாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் அசோசியேட் துணைத் தலைவர் அதுல் சூட் கூறியதாவது, "ஜூலை மாதம் நிறுவனத்திற்கு தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. அண்மையில் எங்களின் B SUV பிரிவில், முதல் சுய-சார்ஜ் திறன் கொண்ட ஹைப்ரிட் மின்சார வாகனத்தை வெளியிட்டோம் (அர்பன் க்ரூஸர் ஹைரைடர்). இதன் வருகை உலகளாவிய மின்வாகன தேடலுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "எங்கள் பிராண்டின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள எங்களின் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்களின் சொந்த தயாரிப்புகளான கேம்ரி ஹைப்ரிட் மற்றும் வெல்ஃபயர் ஆகிய கார் மாடலுக்கும் சிறந்த எண்ணிக்கையில் ஆர்டர்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன" என்றார்.


Click it and Unblock the Notifications








