இன்னும் 3 மாசம்தான்... டீசல் என்ஜின் உடன் இன்னோவா காரை வாங்கலாம்!! அதிரடி நடவடிக்கைகளில் டொயோட்டா
மீண்டும் டீசல் என்ஜின் உடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி கார் எப்போது விற்பனையை துவங்கும் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

இந்தியர்கள் மிகவும் விரும்பும் டொயோட்டா கார்களுள் ஒன்று என்று பார்த்தால், இன்னோவா க்ரிஸ்ட்டாவை சொல்லலாம். விலை சற்று அதிகமாக இருப்பினும், கம்பீரமான தோற்றம் மற்றும் விசாலமான கேபின் உள்ளிட்டவற்றால் நம் நாட்டில் இன்னோவாவிற்கு என்றே பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.

இதனாலேயே முடிந்தவரையில், இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டொயோட்டா நிறுவனம் அவ்வப்போது அப்டேட் செய்துவிடுகிறது. இந்த வகையில் அடுத்ததாக இன்னோவா ஹைகிராஸ் வெளிவரவுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் டீசல் வேரியண்ட்களுக்கான முன்பதிவுகளை டொயோட்டா நிறுவனம் நிறுத்தியது.

அதற்குமுன் காரை முன்பதிவு செய்தவர்களுக்கும் சற்று தாமதமாகவே இன்னோவா டீசல் கார்கள் டெலிவிரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பு வழங்கப்பட்டு வந்த 2.4 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வில் இல்லாமல், 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாங்கும் சூழல் தற்சமயம் உள்ளது.

இந்த நிலையில் டீசல் என்ஜின் உடன் அடுத்த 2023 ஜனவரி மாதத்தில் இருந்து இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விற்பனை செய்வதை டொயோட்டா நிறுவனம் துவங்கவுள்ளதாக தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, முன்பு வழங்கப்பட்ட அதே 2.4 லிட்டர் டீசல் என்ஜினுடையே இன்னோவா டீசல் வேரியண்ட்கள் வழங்கப்படும்.

டொயோட்டா தொழிற்சாலை புதிய அர்பன் க்ரூஸர் ஹைரடர் நடுத்தர-அளவு எஸ்யூவி காராக சிறிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்த பின் வழக்கம்போல் இன்னோவா க்ரிஸ்ட்டாவில் டீசல் என்ஜின் தேர்வு வழங்கும் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 எச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

மறுபடியும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் போது இதே அளவிலான ஆற்றலை தான் இந்த டீசல் என்ஜின் வெளிப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்னோவாவின் டீசல் வேரியண்ட்களில் வழங்கப்படும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 166 எச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இன்னோவா க்ரிஸ்ட்டாவில் கியர்பாக்ஸ் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. இன்னோவா க்ரிஸ்ட்டாவில் டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படுவது நிறுத்தி கொள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாக, சிப்-கள் பற்றாக்குறை தெரிவிக்கப்பட்டது. டொயோட்டாவின் முழு-அளவு எஸ்யூவி காராக இன்னோவா முதல்முறையாக 2005இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்பின் இன்னோவாவின் இரண்டாம் தலைமுறை இன்னோவா க்ரிஸ்ட்டா என்கிற பெயரில் களமிறக்கப்பட்டது. அதுதான் தற்போதுவரையில் விற்பனையில் உள்ள நிலையில், 2ஆம் தலைமுறை இன்னோவாவில் டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படுவது இத்தோடு நிறுத்தி கொள்ளப்படலாம் என முன்பு வதந்திகள் வெளியாகின. ஆனால் தற்போது டீசல் என்ஜின் தேர்வு மீண்டும் இன்னோவாவில் களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ஏற்கனவே கூறியதுபோல் இன்னோவா ஹைகிராஸ் கார் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இன்னோவா ஹைகிராஸ் காரில் தற்போதைய 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜினிற்கு மாற்றாக வலிமையான ஹைப்ரிட் பவர்ட்ரெயின் தேர்வு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








