மத்திய அமைச்சரையே வெறிக்க வெறிக்க பார்க்க வைத்த Toyota Mirai... அதிகாரப்பூர்வமா இந்தியா வந்திருக்கு!
டொயோட்டா நிறுவனத்தின் தரமான தயாரிப்பாக பார்க்கப்படும் மிராய் (Toyota Mirai) எனும் ப்யூவல் செல்லால் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் கார் அதிகாரப்பூர்வமாக இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா (Toyota) நிறுவனம் அதன் மிராய் ஃப்யூவல் செல் எலெக்ட்ரிக் காரை (Mirai FCEV) இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. கடந்த சில நாட்களாக இந்திய சாலையில் வைத்து இக்காரை பரிசோதனைக்கு உட்படுத்தி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக மிராய் காரை இந்தியா கொண்டு வந்திருக்கின்றது, டொயோட்டா.

மிராய் ஃப்யூவல் செல் எலெக்ட்ரிக் காரை டொயோட்டா நிறுவனத்தின் தரமான தயாரிப்பு என கூறலாம். இந்த வார்த்தைக்கு மிக மிக உகந்த வாகனமாக மிராய் காட்சியளிக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் எண்ணற்ற ஆச்சரியங்களுக்கு சொந்தக்காரராக மிராய் காட்சியளிக்கின்றது.

மிக சிறந்த பயன்பாட்டு வசதிக் கொண்டதாக நாம் எலெக்ட்ரிக் கார்களைக் கருதுகின்றோம். ஆனால், அதைக் காட்டிலும் மிக மிக சிறந்ததாக இந்த ஃப்யூவல் செல் கார் காட்சியளிக்கின்றது. டொயோட்டா மிராய் ஓர் மின்சார கார்தான். ஆனால், வழக்கமான மின்சார கார்களைப் போன்றில்லாமல் தனக்கு தேவையான மின்சாரத்தை ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்களை எரிப்பதன் வாயிலாகப் பெற்றுக் கொள்கின்றது.

இந்த எரிப்பு செயலின்போது கார்பனுக்கு பதிலாக நீராவியே வெளிவரும். எனவேதான், இதனையும் ஆக சிறந்த பசுமை
வாகனமாக வாகன உலகம் பார்க்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு எலெக்ட்ரிக் வாகனத்தையும் சார்ஜ் செய்ய வேண்டுமானால் மணி கணக்கில் நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கின்றது. குறைந்தபட்சம் 2 மணி நேரங்கள் முதல் 6 மணி நேரங்கள் வரை தேவைப்படுகின்றது.

ஆனால், டொயோட்டா மிராய் கார் இந்த விதிகளுக்கு அப்பாற்பட்டது. ஆம், ஓர் பெட்ரோல்-டீசல் காரின் எரிபொருள் தொட்டியை நிரப்பும் நேரமே இதற்கும் தேவைப்படுகின்றது. மிராய் காரில் சிஎன்ஜி மற்றும் ஆட்டோ எல்பிஜி வாகனங்களில் இடம் பெற்றிருப்பதைப் போன்ற சிலிண்டர்கள் இடம் பெற்றிருக்கும். அவற்றில் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை முழுமையாக நிரப்ப 3 முதல் 5 நிமிடங்களே போதுமானது. அவ்வாறு ஒரு முறை முழுமையாக ஃப்யூவல் செல்லை நிரப்பினால் பல நூறு கிமீ தூரங்களை எந்தவித தடையுமின்றி கடக்கலாம்.

டொயோட்டா மிராய் காரில் ஒரு முறை முழுமையாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்பினால் 646 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். உலக நாடுகள் சிலவற்றில் இந்த கார் விற்பனையில் இருக்கின்றது. அங்கு ஆயிரம் கிமீ வரை இக்கார் ரேஞ்ஜ் தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூப்பரான காரையே இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்திருக்கின்றது, டொயோட்டா நிறுவனம்.

ஐகேட் (International Centre for Automotive Technology) பைலட் திட்டத்தின் ஓர் பகுதியாக இக்கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த நிகழ்வில், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய அரசின் முக்கிய பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். எரிபொருளால் இயங்கும் வாகனங்களால் ஏற்படும் மாசுபாடு மற்றும் பின் விளைவுகளைக் குறைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு மிக கவனமாக இருக்கின்றது.

இதன் அடிப்படையில் மாற்று திறன் கொண்ட வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளை அரசு அதி-தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில், ஆட்டோ எல்பிஜி, சிஎன்ஜி, ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் எஞ்ஜின், ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் உள்ளிட்ட வாகன பயன்பாடு நாட்டில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே, டொயோட்டா மிராய் ஃப்யூவல் செல் எலெக்ட்ரிக் கார் இந்தியா கொண்டு வரப்பட்டிருக்கின்றது. ஆனால், இதன் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல் அறிவிக்கப்படவில்லை. ஆகையால், அதிகாரப்பூர்வ வருகைக்கு பின்னரும் அதனை வாங்க முடியாத நிலையே தற்போது தென்படுகின்றது.

டொயோட்டா நிறுவனம் மிராய் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் காரை 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே முதல் முறையாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது. இதன் இரண்டாம் தலைமுறை காரை மிக விரைவில் கர்நாடகாவில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் தயாரிக்க டொயோட்டா திட்டமிட்டிருக்கின்றது. ஆகையால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இக்கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காருக்கு முன்னதாகவே ஃப்ளெக்ஸ்-ஃப்யூவல் எஞ்ஜின் கொண்ட கேம்ரி கார் விற்பனைக்கு வந்துவிடும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








