எல்லாருக்கும் பிடிச்ச கம்பெனி... டொயோட்டா நிறுவனம் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!
இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் விற்பனையில் புதிய மைல்கல் ஒன்றை கடந்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. 20 லட்சம் (2 மில்லியன்) கார்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல். இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து தற்போது வரை ஒட்டுமொத்தமாக 20 லட்சம் கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.

இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் 20 லட்சமாவது கார் நடப்பு ஏப்ரல் மாதம்தான் வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள நிப்பான் டொயோட்டா என்ற டொயோட்டா டீலர்ஷிப், 20 லட்சமாவது காரை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்துள்ளது. அது டொயோட்டா க்ளான்சா கார் ஆகும். இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது.

டொயோட்டா-சுஸுகி நிறுவனங்களின் கூட்டணியின் அடிப்படையில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. தெளிவாக சொல்வதென்றால் இது மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். சுஸுகி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டணியின் அடிப்படையில், இந்த காரை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டின் கீழ் விற்பனை செய்து வருகிறது.

2022 மாருதி சுஸுகி பலேனோ காரை தொடர்ந்து வெகு சமீபத்தில்தான் 2022 டொயோட்டா க்ளான்சா காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டொயோட்டா நிறுவனம் வெகு விரைவில் க்ளான்சா காரின் சிஎன்ஜி மாடலையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வது ஏற்கனவே உறுதியாகியுள்ளது. 2022 பலேனோ சிஎன்ஜி காரை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது சாலை சோதனைகளில் ஈடுபடுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே கூடிய விரைவில் 2022 மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி கார் விற்பனைக்கு வரலாம். இதை தொடர்ந்து 2022 டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி காரும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ தவிர, விட்டாரா பிரெஸ்ஸா சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரையும், டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்த கார், டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் விற்பனையாகி கொண்டுள்ளது. இந்த 2 கார்களும் டொயோட்டா நிறுவனம் தனது விற்பனை எண்ணிக்கையை ஓரளவிற்கு உயர்த்துவதற்கு உதவி செய்து வருகின்றன. அதே நேரத்தில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய கார்களும் தொடர்ந்து பிரபலமான மாடல்களாக இருந்து வருகின்றன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரானது, எம்பிவி ரகத்தை சேர்ந்தது. மறுபக்கம் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரானது, ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. அதே நேரத்தில் பிரீமியம் செக்மெண்ட்டில், கேம்ரி ஹைப்ரிட் மற்றும் வெல்ஃபயர் எம்பிவி ஆகிய கார்களை டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

இதில், டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி காரானது, பிரபலங்கள் பலரின் முதன்மையான தேர்வாக திகழ்ந்து வருகிறது. இதற்கிடையே டொயோட்டா நிறுவனம் வெகு சமீபத்தில்தான் தனது கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளீட்டு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், கார்களின் விலைகளை உயர்த்தியாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என இது தொடர்பாக டொயோட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டொயோட்டா மட்டுமின்றி, மாருதி சுஸுகி போன்ற பல்வேறு நிறுவனங்களும் சமீபத்தில்தான் கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதற்கிடையே க்ளான்சா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்களின் வரிசையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி மற்றும் சியாஸ் செடான் கார்களையும் டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்வதற்கு தயாராகி வருகிறது.

இதில், மாருதி சுஸுகி எர்டிகா காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன், டொயோட்டா ரூமியான் என்ற பெயரில் ஏற்கனவே தென் ஆப்ரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து இந்தியாவிலும் டொயோட்டா ரூமியான் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் 2022 எர்டிகா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








