என்னங்க சொல்றீங்க... இனி இன்னோவா காரை டீசல் என்ஜினுடன் வாங்க முடியாதா? கட்டாய முடிவில் டொயோட்டா!!
பிரபலமான இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கான முன்பதிவுகளை இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் நிறுத்தியுள்ளது.
Recommended Video
எதற்காக இந்த நடவடிக்கை? இனி இன்னோவா கார்களை வாங்க முடியாதா? என்பது குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் இந்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் முற்றிலுமாக அப்டேட் செய்யப்பட்ட க்ளான்ஸா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து, சமீபத்திய டொயோட்டா காராக அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கடந்த ஜூலை மாதத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், தற்போது இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட்டிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் நிறுத்திக்கொள்ளப்பட்டு உள்ளன. இதனால் இன்னோவா டீசல் கார்களை இதற்கு முன்னர் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இன்னும் சில வாரங்களுக்கு டெலிவிரி பெற முடியும்.

அதிலிலும் இன்னோவா டீசல் காரை முன்பதிவு செய்தவர்களில் அனைவருக்கும் உடனடியாக கார் டெலிவிரி செய்யப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்த ஆகஸ்ட் மாத துவக்கம் வரையில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இன்னோவா டீசல் கார்கள் நிர்ணயித்தப்படி உடனடியாக டெலிவிரி செய்யப்படும் என்றும், அதன்பின் முன்பதிவு செய்தவர்களுக்கு சற்று கால தாமத்திற்கு பிறகே டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டாவின் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம், சிப்-கள் பற்றாக்குறையாகும். கொரோனா வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளின் எதிரொலியாக, உலகளவில் ஏற்பட்ட சிப்-கள் பற்றாக்குறை கடந்த 1 வருடத்திற்கும் மேலாக பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இதில் இந்தியாவின் நம்பர்.1 கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி கூட சிக்கி சின்னாபின்னாமானதை கடந்த மாதங்களில் பார்த்திருந்தோம்.

இருப்பினும் கடந்த சில மாதங்களாக சிப்-கள் பற்றாக்குறை ஓரளவிற்கு சீராகி வருவதாக கூறப்பட்டுவந்த நிலையில், இன்னோவா க்ரிஸ்ட்டா டீசல் கார்களின் உற்பத்தியை டொயோட்டா நிறுத்தவுள்ளது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இன்னோவா க்ரிஸ்ட்டாவின் டீசல் வேரியண்ட்களின் முன்பதிவுகள் மட்டுமே தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதே தவிர்த்து, பெட்ரோல் வேரியண்ட்களின் உற்பத்தியும், முன்பதிவுகளும் தொடர்ந்து நடைபெறும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இன்னோவா க்ரிஸ்ட்டாவை போன்று இந்தியர்கள் பலர் விரும்பக்கூடிய டொயோட்டா காராக விளங்கும் ஃபார்ச்சூனரின் முன்பதிவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை. முழு-அளவு எஸ்யூவி காரான ஃபார்ச்சூனரிலும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இன்னோவா டீசல் கார்களுக்கான முன்பதிவுகள் மீண்டும் எப்போது துவங்கப்படும் என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

அல்லது, தற்போதைய 2ஆம் தலைமுறை இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டீசல் என்ஜின் வழங்கப்படுவது இத்தோடு நிறுத்திக்கொள்ளப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் டொயோட்டா நிறுவனம் 3ஆம் தலைமுறை இன்னோவா க்ரிஸ்ட்டா காரை இந்த வருட இறுதிக்குள்ளாகவோ அல்லது அடுத்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்திலோ அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

இன்னோவா ஹைக்ராஸ் அல்லது இன்னோவா ஜெனிக்ஸ் என்ற இரு பெயர்களில் ஏதேனும் ஒன்றில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை இன்னோவா காரின் ஸ்பை படங்கள் கடந்த மாதங்களில் சிலமுறை இணையத்தில் வெளியாகியுள்ளன. மேற்கூறப்பட்டுள்ள இரு பெயர்களில் இன்னோவா ஹைக்ராஸ் என்ற பெயரில் புதிய இன்னோவா அறிமுகமாகுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாம்.

எம்பிவி ரக காரான இன்னோவா க்ரிஸ்ட்டாவில் 2.4 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளை டொயோட்டா நிறுவனம் வழங்கி வந்தது. ஆனால் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாங்க முடியும்.

இன்னோவாவில் வழங்கப்பட்ட டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 எச்பி வரையிலான இயக்க ஆற்றலையும், பெட்ரோல் என்ஜின் 166 எச்பி வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








