புக்கிங் செய்ய குவியும் வாடிக்கையாளர்கள்... வேண்டாம் என தவிர்க்கும் டொயோட்டோ... என்ன காரணம் தெரியுமா?
புக்கிங் குவிந்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் டொயோட்டோ நிறுவனம் ஹைலக்ஸ் (Toyota Hilux) பிக்-அப் ட்ரக்கிற்கான புக்கிங் பணிகளை நிறுத்தியிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பிற்கான காரணத்தையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டொயோட்டா (Toyota) நிறுவனம் உற்பத்தி செய்து வரும் உலக புகழ்பெற்ற வாகன மாடல்களில் ஹைலக்ஸ் (Hilux)-ம் ஒன்று. இது ஓர் பிக்-அப் ட்ரக் வாகனமாகும். சரக்குகளுடன் சேர்த்து நான்கு பேர் வரை இந்த வாகனத்தில் பயணிக்க முடியும். இத்தகைய 2 இன் 1 வசதியை இவ்வாகனம் கொண்டிருப்பதனாலேயே உலக நாடுகள் பலவற்றில் மிக சிறப்பான வரவேற்பு ஹைலக்ஸிற்கு கிடைத்து வருகின்றது.

இத்தகைய வாகனத்தையே மிக சமீபத்தில் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மிக விரைவில் இதுகுறித்த தகவல் வெளியிடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான காலக்கெடுவாக மார்ச் மாதத்தை நிறுவனம் நிர்ணயித்திருக்கின்றது.

அதேவேலையில், ஜனவரி மாதத்தில் வெளியீடு செய்யப்பட்ட கையோடு புக்கிங் பணிகளை டொயோட்டா தொடங்கியது. நீண்ட நாட்களாக இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இந்த வாகனம் இருந்து வருகின்ற காரணத்தினால், நிறுவனமே எதிர்பார்த்திராத ஓர் வரவேற்பை ஹைலக்ஸ் நாட்டில் பெற்று வருகின்றது.

ஆம், மிக அமோக வரவேற்பினால் புக்கிங்குகள் மிக தாரளமாக குவிந்து வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டொயோட்டா நிறுவனம் ஹைலக்ஸிற்கான புக்கிங்குகளை நிறுத்தியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு தற்போது நிலவி வரும் அதீத வரவேற்பே காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் இந்த கூற்று ஹைலக்ஸ் பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. முன்பதிவுகள் மிக அதிகளவில் குவிந்துக் கொண்டிருக்கையில் அதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருப்பதும், இந்த அறிவிப்பிற்கு எதிர்பார்த்திராத டிமாண்டுமே காரணம் என கூறியிருப்பது ஒட்டுமொத்த வாகன உலகையுமே வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றது.

இந்த அமோக வரவேற்பு நிறுவனத்தின் விநியோகத்தை பாதிக்கும் என கூறியே புக்கிங்கிற்கு டொயோட்டா தற்காலிக தடையை விதித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அசௌகரியமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்பதற்காக முன் கூட்டியே இந்த நடவடிக்கையை டொயோட்டா எடுத்திருக்கின்றது.

"அறிமுகம் செய்யப்பட்ட பதினைந்தே நாட்களில் இக்காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்க தொடங்கி இருப்பதாக" டொயோட்டா நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மிக விரைவில் புக்கிங்கை தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் தொடங்க இருப்பதாக அவர் கூறினார்.

டொயோட்டா ஹைலக்ஸ் அதிக சிறப்புகள் கொண்ட வாகனமாக காட்சியளிக்கின்றது. இது ஓர் பிக்-அப் ட்ரக் ரகமாக இருந்தாலும் தொழில்நுட்ப வசதிகளையும், சொகுசு வசதிகளையும் டொயோட்டா வாரி வழங்கியிருக்கின்றது. பெரிய ஹெக்ஸகோனல் க்ரில், எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய மின் விளக்குகள், பிளாஸ்டிக் கிளாடிங்குகள், ஃபூட் போர்டுகள், பின் பக்கத்தில் பெரியளவிலான பம்பர் உள்ளிட்டவை ஹைலக்ஸில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரை டொயோட்டா நிறுவனம் அதன் பிற புகழ்பெற்ற கார் மாடல்களான இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார் மாடல்களை தழுவி உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், கவர்ச்சிக்கு சற்றும் குறைவில்லாத காராகவும் ஹைலக்ஸ் காட்சியளிக்கின்றது.

டொயோட்டா ஹைலக்ஸ் காரில் 2.8 லிட்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 201 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதன் தானியங்கி வேரிண்ட் 500 என்எம் டார்க் வரை வெளியேற்றும். இக்காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இரு வெவ்வேறு விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஸ்டாண்டர்டு மற்றும் ஹை என இரு தேர்வுகளிலேயே ஹைலக்ஸ் விற்பனைக்குக் கிடைக்கிறது. இத்துடன், எமோசனல் சிவப்பு, ஒயிட் பியர்ல் ஷைன், சில்வர் மெட்டாலிக், கிரே மெட்டாலிக் மற்றும் சூப்பர் ஒயிட் ஆகிய ஐந்து விதமான நிற தேர்வுகளிலும் ஹைலக்ஸ் விற்பனைக்குக் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








