டொயோட்டா அர்பன் க்ரூஸர் இவ்வளவு பாதுகாப்பான காரா!.. Global NCAP மோதல் ஆய்வில் அதிக புள்ளிகளை பெற்று அசத்தல்!
டொயோட்டா அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser) காரின் பாதுகாப்பு திறன் பற்றிய முக்கிய விபரங்கள் வெளி வந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றாக அர்பன் க்ரூஸர் (Urban Cruiser) இருக்கின்றது. இந்த காரே பாதுகாப்பான வாகனம் என்ற சான்றை தற்போது பெற்றிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் இந்த சப் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஐந்திற்கு நான்கு ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது.

இந்த அதிகபட்ச ரேட்டிங் டொயோட்டா நிறுவனத்திற்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza)-வின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலே இந்த அர்பன் க்ரூஸர். ஒரு சிலருக்கு இந்த தகவல் புதியதாக இருக்கும். ஆனால், விஷயம் தெரிந்தவர்களுக்கு இது பழங்கால தகவலாகும்.

டோயோட்டா அர்பன் க்ரூஸரில் இரட்டை ஏர் பேக்குகள், ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மவுண்ட் மற்றும் முன்பக்க ப்ரீடென்சனர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவையே, அக்காரை பாதுகாப்பான வாகனமாக தற்போது மாற்றியிருக்கின்றது.

பெரியவர்களுக்கான பாதுகாப்பு தர ஆய்வில் 4 ஸ்டார்களையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு தர ஆய்வில் 3 ஸ்டார்களையும் அந்த கார் பெற்றிருக்கின்றது. புள்ளி விவரங்களுடன் கூற வேண்டுமானால், பெரியவர்களுக்கான பாதுகாப்பு குறித்து 17 புள்ளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 13.52 புள்ளிகளையும், சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து 49 புள்ளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 36.68 புள்ளிகளையும் அர்பன் க்ரூஸர் பெற்றிருக்கின்றது.

சிறியவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் லேசான தடுமாற்றத்தை அர்பன் க்ரூஸர் சந்தித்திருப்பதை நம்மால் உணர முடிகின்றது. இதனால்தான் சற்று குறைவான புள்ளிகளை அது பெற்றிருக்கின்றது. அதேநேரத்தில், பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் அக்கார் மிக சிறப்பாக செயல்பட்டிருக்கின்றது.

தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் வகையில் அது செயல்பட்டிருக்கின்றது. எனவேதான் ஐந்திற்கு நான்கு ஸ்டார்களை அது தட்டிச் சென்றிருக்கின்றது. டொயோட்டா ப்ரெஸ்ஸா அதிக பாதுகாப்பான கார் மாடல் மட்டுமல்லிங்க. அது அதிக சிறப்பு வசதிகள் கொண்ட வாகனமும்கூட.

ஒயர்லெஸ் ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு வசதி கொண்ட திரை, நேவிகேஷன் மற்றும் குரளை அறிந்து செயல்படும் திறன், ஒயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம், தானியங்கி ஏசி யூனிட், சன் ரூஃப், பேடில் ஷிஃப்டர், 360 டிகிரி கேமிரா, புதிய நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இது மாருதி சுஸுகியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட காராக இருந்தாலும், அதனுடன் ஒத்துப்போகாத வகையில் சில மாற்றங்களை டொயோட்டா செய்திருக்கின்றது. அதாவது, அணிகலன் விஷயத்தில் மற்றும் உட்புற டிசைன் விஷயத்தில் நிறுவனம் மாற்றம் செய்திருக்கின்றது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எஞ்ஜின் 104 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் இக்காரில் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸுகியின் விட்டாரா ப்ரெஸ்ஸா கார் மாடலை மட்டுமில்லைங்க அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற ஹேட்ச்பேக் கார் மாடலான பலேனோவையும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவ்விரு கார் மாடலுக்கும் நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. மிக தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் நிறுவனத்தின் விற்பனை சதவீதத்தை தூக்கி நிறுத்துமளவிற்கு மிக சிறப்பான விற்பனையை அது பெற்று வருகின்றது.


Click it and Unblock the Notifications








