புதிய ஆப்புக்கு ரெடியா இருங்க! மூன்றாம் நபர் மோட்டார் இன்சூரன்ஸை உயர்த்த அரசு திட்டம்! இத எதிர்பார்க்கவே இல்ல!
விரைவில் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மோட்டார் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டணத்தை மிக விரைவில் மத்திய அரசு உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான முன்மொழிவை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் செய்ததன் வாயிலாக இந்த தகவல் உறுதியாகியுள்ளது.

இதனால் புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் தொகை உயர்வு நடவடிக்கை வரும் ஏப்ரல் 1ம் தேதி நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், எந்தெந்த சிசி திறன் கொண்ட வாகனத்தின் பிரீமியம் தொகை எவ்வளவு வரை உயர்த்தப்பட இருக்கின்றது என்பது பற்றிய விரிவான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் முன்மொழிந்திருப்பதன்படி, 1000 சிசி திறன் கொண்ட தனி நபர் கார்களுக்கு ரூ. 2,094 மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. தற்போது, ரூ. 2,072 மட்டுமே இதற்கான கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

இதேபோல் 1000 சிசி முதல் 1,500 சிசி வரையிலான திறன் கொண்ட கார்களுக்கு ரூ. 3,416 வரை பிரீமியம் தொகை உயர்த்தப்பட இருக்கின்றது. தற்போது ரூ. 3,221 மட்டுமே பிரீமியம் தொகையாக வசூலிக்கப்படுகின்றது. இதேபோல், 1500 சிசி-க்கும் அதிகமான திறன் கொண்ட வாகனங்களுக்கு ரூ. 7,897 வரை பிரீமியம் உயர்த்தப்பட இருக்கின்றது. தற்போது 7,890 ரூபாய் இதற்கான பிரீமியம் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

150 சிசி முதல் 350 சிசி வரையிலான இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 1,366 வரையிலும், 350 சிசி-க்கும் அதிகமான திறன் கொண்ட டூ-வீலர்களுக்கு ரூ. 2,804 வரையிலும் பிரீமியம் கட்டணம் உயர இருக்கின்றது. இந்த திடீர் பிரீமியம் உயர்வு அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் விளைவாக கணிசமான அளவு புதிய வாகனங்களின் விலை உயர இருக்கின்றது.

கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக இரண்டு ஆண்டு காலங்கள் அவகாசத்திற்கு பின்னர் இந்த திருத்தப்பட்ட மூன்றாம் நபர் மோட்டார் வாகன இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டணம் உயர்வு அமலுக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. முன்னதாக காப்பீட்டு கட்டுப்பாட்டாளர் இர்டாயே (IRDAI) மோட்டார் வாகன இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டணம் உயர்வை அறிவித்து வந்தது.

ஆனால், முதல் முறையாக சாலை போக்குவரத்து அமைச்சகம், காப்பீட்டு கட்டுப்பாட்டாளருடன் இணைந்து ஆலோசித்து இந்த அறிவிப்பை வெளியிடுகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பில் ஓர் மகிழ்ச்சி தகவலும் இருக்கின்றது. அதாவது, மின் வாகனங்களுக்கான பிரீமியம் தொகை 15 சதவீதம் வரை குறைக்கவும் சாலை போக்குவரத்து அமைச்சகம் முன் மொழிந்திருக்கின்றது.

தனிநபர் மின்சார கார்கள், இருசக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் பயணிகள் வர்தக வாகனங்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஹைபிரிட் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் மோட்டார் வாகன பிரீமியம் கட்டணத் தொகை 7.5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

30KW மிகாமல் திறனைக் கொண்டிருக்கும் தனி நபர் கார்களுக்கு ரூ. 1,780-ம், 30 கிலேவாட் முதல் 65 கிலோவாட் வரை திறன் கொண்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு 2,904 ரூபாயும் பிரீமியம் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்ஸ்களை கையாளும் மின்சார வர்த்தக வாகனங்களுக்கு ரூ. 35,313 முதல் ரூ. 44,242 வரை பிரீமியம் தொகை உயர்த்தப்பட உள்ளது.

மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டமானது மற்றவருக்கான திட்டம் ஆகும். நம்முடைய வாகனத்தால் பிறர் சந்திக்கும் சேதாரத்தை சரி செய்ய இந்த காப்பீட்டு திட்டம் உதவும். ஆகையால், அனைவருக்குமான காப்பீட்டு திட்டத்தை வாகன உரிமையாளர்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த நிலையிலேயே மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்திற்கான கட்டணத்தை உயர்த்தும் பணியில் மத்திய அரசு களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த ஆலோசனைகளுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. மார்ச் இறுதிக்குள் கருத்தை தெரிவிக்கலாம்.


Click it and Unblock the Notifications








