என்ன சின்ன திரை நடிகை மகாலட்சுமி பயன்படுத்தும் கார் டிரைவரே இல்லாம இந்த செயல்களை எல்லாம் செய்யுமா?
சின்ன திரை நடிகை மகாலட்சுமி பயன்படுத்தும் எம்ஜி குளோஸ்டர் கார் டிரைவரே இல்லாமல் என்ன செயல்களை எல்லாம் செய்யும் தெரியுமா? இதுகுறித்த விரிவான தகவலைக் காணலாம், வாங்க.

திடீர் திருமணம் செய்து அனைத்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது ரவீந்தர் சந்திர சேகரன் - மகாலட்சுமி ஜோடி. தயாரிப்பாளரும், சின்னத் திரை நடிகையும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தநிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற்றது.

இவர்களின் திருமணம் குறித்து வெளியாகிய படம் மற்றும் தகவல்கள் பலரை பொறாமைப்பட வைத்தது என்றே கூறலாம். இந்த நிலை தற்போதும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, இவர்கள் இருவரும் செய்து வரும் ரொமான்ஸ் அலம்பலுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. இவர்களின் படத்தை பார்த்து 90-ஸ் கிட்ஸ்கள் நொந்துபோனதுதான் மிச்சம்.

இந்த நிலையிலேயே தனது ஆசை மனைவி மகாலட்சுமிக்கு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கின்றார் தயாரிப்பாளர் ரவீந்தர். இந்த கார் பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்று ஒரு வாரமாகிவிட்டது. மேலும், ஏற்கனவே இருவரும் புதிய காரில் வலம் வர ஆரம்பித்துவிட்டனர். பரிசளிப்பை அடுத்து இந்த கார் பலரின் கவனத்தை ஈர்க்க தொடங்கியிருக்கின்றது.

அப்படி என்ன கார் அது, அதுல என்ன மாதிரியான சொகுசு வசதிகள் மற்றும் சிறப்புகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ரவீந்தர் தனது காதல் மனைவி மகாலட்சுமிக்கு எம்ஜி குளோஸ்டர் காரையே பரிசாக வழங்கியிருக்கின்றார். நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் மாடலாக இது இருக்கின்றது.

குளோஸ்டர் ஓர் எஸ்யூவி ரக காராகும். இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 31.99 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் எம்ஜி நிறுவனம் தன்னாட்சி லெவல் - 1 தொழில்நுட்பத்தை வவழங்கியிருக்கின்றது. இந்த தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் கார் மாடல் இதுவே ஆகும்.

இதுமட்டுமின்றி இந்த பிரீமியம் தர எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் 4X4 மற்றும் 4X2 ஆகிய இரு விதமான டிரைவிங் சிஸ்டம் மற்றும் அடாஸ் அம்சங்களுடனும் விற்பனைக்கு வழங்குகின்றது. இவை அனைத்திலும் அடாஸ் மற்றும் தன்னாட்சி லெவல் - 1 தொழில்நுட்பங்களே மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது.

இவையிரண்டும் காருக்குள் பயணிப்பவர்களுக்கு அதீத பாதுகாப்பை வழங்கும் பொருட்டு எம்ஜி வழங்கியிருக்கின்றது. தானாக இயங்குதல், அவசர நேரங்களில் தானாக பிரேக் பிடித்தல் போன்ற உயிர் காக்கும் செயல்களை செய்யும் பொருட்டே இந்த நவீன கால தொழில்நுட்பங்கள் குளோஸ்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை அடக்கியதாகக் குளோஸ்டர் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ளக் கூடிய டிரைவர் இருக்கை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டிரைவர் இருக்கை சூடாக வைத்துக் கொள்ளும் அம்சம், பிளைண்ட் ஸ்பாட்களைக் கண்டறியும் வசதி, டிரைவரின் தூக்கத்தைக் கண்டறியும் சிஸ்டம், இருக்கைகளில் மசாஜ் அம்சம், தானாக பார்க் செய்யும் அம்சம், ஃபார்வார்டு கொலிசன் வார்னிங், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், பிஎம்-2.5 ஏர் ப்யூரிஃபையர் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் போன்ற பன்முக தொழில்நுட்ப வசதிகள் குளோஸ்டரில் இடம் பெற்றிருக்கின்றன.

இதுமாதிரியான அட்டகாசமான அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் என பலர் இக்காரை வாங்கி வருகின்றனர். இவர்களின் பட்டியலில் தற்போது ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடியும் இணைந்துள்ளது. இந்த வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக மும்முனை சீட் பெல்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், டிராக்சன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், டூர் ஓபனிங் வார்னிங் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவற்றுடன் பன்முக சிறப்பு வசதிகள் அடங்கிய பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐ-ஸ்மார்ட் வசதியுடன் குளோஸ்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த திரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது. இத்துடன், இத்திரை வாயிலாக சாட்டிங் மற்றும் வாய்ஸ் இன்டராக்சன் செய்து கொள்ள முடியும். இதுதவிர, இ-கால், இசை, ஜியோ ஃபென்ஸ், ஐ-கால் போன்ற வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய தரமான காரே சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








