ரூ.20 லட்சம் இருந்தாலே போதும்... ADAS வசதிகளுடன் 2023இல் இந்தியாவிற்குவர உள்ள கார்கள்!!
ADAS, அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் என்பது முழு விரிவாக்கம். தற்சமயம் உருவாக்கப்படும் மாடர்ன் கார்களில் மிக முக்கிய பாதுகாப்பு அம்சமாக மாறிவரும் ஒன்று. இன்னும் சொல்ல போனால், காரின் பாதுகாப்பு தரத்தை நிர்ணயிக்கும் என்சிஏபி அமைப்புகள் சோதனைக்கு வரும் கார்களில் அடாஸ் தொகுப்பு உள்ளதா என்றே முதலில் பார்க்க ஆரம்பித்துவிட்டன.
இதனாலேயே சந்தையில் புதியதாக விற்பனைக்கு வரும் கார்களில் பரவலாக இருக்கக்கூடிய ஒன்றாக இது மாறிவிட்டது. அடாஸ் தொகுப்பில் டிரைவரை அலார்ட் செய்யக்கூடிய அம்சங்களுடன் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் என ஏகப்பட்ட அட்வான்ஸ்டு வசதிகள் கார் பிராண்டை பொறுத்து ஒன்று கூடுதலாகவோ (அ) குறைவாகவோ வழங்கப்படுகின்றன. இத்தகைய அடாஸ் வசதிகளுடன் ரூ.20 லட்சத்திற்குள் 2023இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 6 கார்களை இனி பார்க்கலாம்.

1. ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்
க்ரெட்டா கார் கடைசியாக 2020 மார்ச் மாதத்தில், அதாவது சரியாக கொரோனா காலம் துவங்கிய மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடல் விரைவில் டெல்லியில் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. புதிய க்ரெட்டாவில் எதிர்பார்க்கப்படும் அடாஸ் வசதிகளில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ரியர் கிராஸ்-டிராஃபிக் கொலிஷன், டிரைவர் ப்ளைண்ட் ஸ்பாட் மானிடர், தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்டவை அடங்கலாம்.
2. 2023 கியா கார்னிவல்
கியாவின் சொகுசு எம்பிவி காரான கார்னிவலின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த 2021இல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த கார்னிவல் ஃபேஸ்லிஃப்ட் கார் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் வருகிற 2023ஆம் ஆண்டில் விற்பனைக்குவர உள்ளது. 2023 கார்னிவலில் ஹை பீம் அசிஸ்ட், டிரைவர் பிளைண்ட் ஸ்பாட் கொலிஷன் வார்னிங், ஃபார்வேர்டு கொலிஷன்-அவாய்டென்ஸ் அசிஸ்ட், ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம்.
3. கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்
கார்னிவலை போன்றே செல்டோஸின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனையும் இந்திய சந்தையில் களமிறக்க கியா நிறுவனம் தயாராகி வருகிறது. செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சமீபத்தில்தான் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. முற்றிலும் புதிய முன்பக்கம் & பின்பக்கத்துடன் 2023 செல்டோஸ் காரில் அடாஸ் வசதிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த அடாஸ் வசதிகளில் வழக்கம்போல் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்டவை அடங்கும்.
4. 2023 டாடா ஹெரியர்
2019இல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட டாடா ஹெரியர் கார் அதன்பின் பல்வேறு அப்டேட்களை ஏற்றுள்ளது. ஆனால் விரைவில் இந்த டாடா எஸ்யூவி காருக்கு மிக முக்கியமான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டு இருந்தது. அப்போது காரின் முன்பக்கத்தில் ரேடார்களை காண முடிந்தது. அதை வைத்து பார்க்கும்போது, புதிய ஹெரியர் காரில் அடாஸ் வசதிகளை டாடா மோட்டார்ஸ் வழங்க அதிக வாய்ப்புள்ளது.
5. டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்
ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் காரை போன்று சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை ஓட்ட ஸ்பை படங்களும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருந்தன. அந்த படங்களில், சஃபாரி சோதனை மாதிரி காரின் முன்பக்கத்தில் ரேடார்களை முன்பக்க பம்பரின் அடிப்பகுதியில் காண முடிந்தது. இதனால் அடாஸை 2023 சஃபாரியிலும் எதிர்பார்க்கலாம். அதுவுமில்லாமல், ஹெரியரிலேயே வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது எனும்போது அதன் 6/7-இருக்கை வெர்சனாக பார்க்கப்படும் சஃபாரியில் கட்டாயம் வழங்கப்படும் என சொல்லலாம்.
6. ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்
வெர்னா, ஹூண்டாயின் பிரீமியம் தர செடான் காராகும். ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் சமீபத்தில் மறைப்புகளுடன் வெர்னா கார் ஒன்றை பொது சாலையில் சோதித்து பார்த்திருந்தது. இது வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காருக்கான சோதனை ஓட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். சற்று விலை குறைவான காரான க்ரெட்டாவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அடாஸ் வழங்கப்பட்டால், நிச்சயமாக வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டிலும் இந்த பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








