"மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வச்சுடாதீங்க"... மின் வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை!
தொடர்ச்சியாக மின்சார இருசக்கர வாகனங்கள் சார்ந்து தீ விபத்துகள் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி களமிறங்கியிருக்கின்றார். இதன் அடிப்படையில் சில முயற்சிகளையும் அவர் எடுத்துள்ளார். இதுகுறித்து வெளியாகியிருக்கும் முக்கிய விபரங்களைக் கீழே உள்ள பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் தகவலுக்குள் போகலாம்.

மின்சார இருசக்கர வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் தீ விபத்து நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால், சில இடங்களில் உயிர் பலி கூட ஏற்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக அமைந்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட மின்சார இருசக்கர வாகன தீ விபத்தில் தந்தை-மகள் இருவருமே சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி இறந்தனர். இந்த நிகழ்வின் அதிர்ச்சி அடங்குவதற்கு உள்ளாகவே அடுத்தடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சார்ந்து பல்வேறு தீ விபத்து நிகழ்வுகள் அரங்கேறின.

இந்த நிலையில், சமீபத்தில் 80 வயதான முதியவர் எலெக்ட்ரிக் வாகனத்தால் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த நிகழ்வு மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் அரங்கேறிய இந்த நிகழ்வு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி, 3 பேர் கடுமையான காயங்களை மின் வாகன தீ விபத்தால் சந்தித்தாகக் கூறப்படுகின்றது.

இதுமாதிரியான தொடர் தீ விபத்து நிகழ்வுகள் மின் வாகனங்கள் மீதிருந்த நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது. இந்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்த விவகாரத்தில் உடனடி தீர்வு காண வேண்டும் என மின் வாகன உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்.

குறிப்பாக, எதிர்காலங்களில் இதேபோல் தொடர் நிகழ்வுகள் அரங்கேறும் எனில் அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மின்சார இருசக்கர வாகனங்கள் சார்ந்து தீ விபத்து நிகழ்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் மத்திய அமைச்சர் தலையிட்டிருப்பது மின் வாகன பிரியர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

"கடந்த இரண்டு மாதங்கங்களில் மட்டும் எண்ணற்ற மின்சார இருசக்கர வாகனங்கள் தீ விபத்து நிகழ்வுகள் அரங்கேறியிருப்பதை குறிப்பிட்ட மத்திய அமைச்சர், அதுகுறித்து, விசாரணை மேற்கொள்ளவும், நிரந்தரமான தீர்வு குறித்த பரிந்துரைகளை வழங்கவும் ஓர் நிபுணர் குழுவை அமைத்திருப்பதாக" அவர் தெரிவித்தார்.

இதன் பின்னர் மின்சார இருசக்கர வாகனங்களை தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசு விரைவில் வெளியிடும் எனவும் அவர் கூறினார். இந்த உத்தரவுகளை அலட்சியமாக ஏதேனும் நிறுவனம் கையாளுமானால், அந்த நிறுவனத்தின்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கையும் அவர் விடுத்துள்ளார்.

அபராதம் அல்லது குறைபாடுல்ல அனைத்து வாகனங்களையும் நிறுவனமே திரும்பி பெற்றுக்கொள்ள உத்தரவிட நேரிடும் என அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில், குறைபாடுல்ல வாகனங்களை நிறுவனம் முன்கூட்டியே கண்டறியுமானால், அவற்றை எந்த தயக்கமும் இன்றி திரும்ப பெற முன் வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, எதிர்காலத்தில் மின்சார இருசக்கர வாகனங்களில் தீ விபத்து ஏற்படாத வண்ணம் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என நம்பப்படுகின்றது. அதேநேரத்தில், சில முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆன்டி ஃபையர் (தீ எதிர்ப்பு திறன் கொண்ட) பேட்டரிகளை உருவாக்கும் முயற்சியில் களமிறங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

எனவே வரும் காலத்தில் தீ விபத்து பற்றிய பயமில்லா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இ-ஸ்கூட்டர் தீப்பிடிப்பு நிகழ்வை அடுத்து, அரசு உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டது. தீ விபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (CFEES) மையத்திடம் தீ விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்யுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளைக் கண்டுபிடிக்கவும் தீ விபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பிடம் சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








