களத்தில் இறங்கும் புதிய 7 சீட்டர் கார்கள்... டாடா, டொயோட்டா எல்லாம் மோத போறாங்க... பொங்கல் களை கட்ட போகுது!
இந்தியாவில் 7 பேர் பயணம் செய்ய கூடிய கார்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே பல்வேறு நிறுவனங்களும், 7 சீட்டர் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் மிகவும் ஆர்வமாக உள்ளன. இதன்படி இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள மூன்று முக்கியமான 7 சீட்டர் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross)
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து, வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023
ஆட்டோ எக்ஸ்போவில் (2023 Auto Expo) விலைகள் அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே டொயோட்டா இன்னோவா காரின் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் (Pongal) இரட்டிப்பு கொண்டாட்டமாக இருக்கும். புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன.

அவை 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) , பெரிய பனரோமிக் சன்ரூஃப் மற்றும் 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் என ஏராளமான வசதிகள் வழங்கப்படவுள்ளன. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் (MG Hector Plus Facelift)
இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார் மிகவும் பிரபலமாக ஒன்றாக திகழ்கிறது. ஏராளமான வசதிகள் வழங்கப்படுவது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் கேபின் சௌகரியமானதாகவும், பிரீமியமானதாகவும் உள்ளது. இந்த சூழலில், எம்ஜி ஹெக்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், இது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.
எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், பல்வேறு புதிய வசதிகள் கூடுதலாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதிகளும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர டிசைனிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை போலவே, இந்திய கார்களில் தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின், இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போதிருவிழாவில், 2023 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதை தொடர்ந்து உடனடியாகவோ அல்லது சில வாரங்களிலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கூடுதல் வசதிகள், டிசைன் அப்டேட்கள் வழங்கப்பட்டாலும், தற்போதைய மாடலில் இடம்பெற்றுள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும்.
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் (Tata Safari Facelift)
எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், அதன் மிக முக்கியமான போட்டி மாடலான டாடா சஃபாரி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை போன்றே, டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடலும், 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல் புதிய டாடா சஃபாரி காரிலும், அடாஸ் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் செயல்திறனை பொறுத்தவரையில், இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே தற்போது விற்பனையில் உள்ள மாடலில் பொருத்தப்பட்டுள்ள அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்தான், புதிய டாடா சஃபாரி பேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம். ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின்னர், டாடா சஃபாரி காரின் விற்பனையும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள 3 கார்களில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலைகள் பொங்கலுக்கு அறிவிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அதே நேரத்தில் மற்ற 2 கார்களின் விலைகளும் பொங்கலை முன்னிட்டோ அல்லது பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு சில வாரங்கள் கழித்தோ அறிவிக்கப்படலாம். எனவே வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய 7 சீட்டர் காரை வாங்குவதாக இருந்தால், நீங்கள் இந்த கார்களை பரிசீலனை செய்யலாம். அதிக குடும்ப உறுப்பினர்களை கொண்டவர்களுக்கு 7 சீட்டர் கார்கள் பொருத்தமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








