ஆம்னியை விட சூப்பரான கார் வருது... 7 பேர் ஜம்முனு போகலாம்... மாருதி மார்க்கெட்டை அடியோடு சரிக்க திட்டம்!
இந்திய சந்தையில் வேகமாக பிரபலமடைந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்றாக சிட்ரோன் (Citroen) உள்ளது. இது பிரான்ஸை சேர்ந்த கார் நிறுவனம் ஆகும். தற்போதைய நிலையில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் (Citroen C5 Aircross) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) என 2 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இதில், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் காரின் விலை தற்போதைய நிலையில் 36.67 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். மறுபக்கம் சிட்ரோன் சி3 கார், மிகவும் விலை குறைவான மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சிட்ரோன் சி3 காரின் ஆரம்ப விலை வெறும் 5.88 லட்ச ரூபாய் மட்டும்தான். அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 8.15 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

பிரீமியம் கார்களை தயாரிக்கும் சிட்ரோன் நிறுவனத்திடம் இருந்து, மிகவும் குறைவான விலையில் வந்துள்ளதால், சி3 காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே சி3 காரின் அடிப்படையில் 7 சீட்டர் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் சிட்ரோன் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது (தற்போது விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 கார், 5 சீட்டர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது).
சிட்ரோன் சி3 காரில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாட்பார்ம்தான், இந்த 7 சீட்டர் காரிலும் பயன்படுத்தப்படவுள்ளது. சி3 காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் 7 சீட்டர் மாடலை, இந்திய சாலைகளில் சோதனை செய்யும் பணிகளை சிட்ரோன் நிறுவனம் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்ட இந்த காரின் விலை மிகவும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.
சிட்ரோன் சி3 காரில் இருப்பதை காட்டிலும், இந்த புதிய 7 சீட்டர் மாடலில் பெரிய வீல்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டெயில்லைட்களின் டிசைனும் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் முன் பகுதியை பொறுத்தவரையில், இந்த புதிய 7 சீட்டர் மாடல், சிட்ரோன் சி3 காரை போன்றேதான் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே சிட்ரோன் சி3 காரின் முன் பகுதியில் இருக்கும் டிசைன் அம்சங்கள் அப்படியே கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சிட்ரோன் சி3 காரின் அடிப்படையில் உருவாகி வரும் இந்த 7 சீட்டர் மாடலில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 இன்ஜின் ஆப்ஷன்களுமே வழங்கப்படலாம் அல்லது இந்த இரண்டில் ஏதாவது ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் ஆரம்பத்தில் இந்த புதிய காரில் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. பின் நாட்களில் வேண்டுமானால் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படலாம். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) ஆகிய கார்களுடன், சிட்ரோன் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு போட்டியிடும்.
இந்த கார்களை காட்டிலும், சிட்ரோன் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் காரின் விலை குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேற்கண்ட கார்கள் மட்டுமல்லாது, ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காருக்கும், சிட்ரோன் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு விற்பனையில் கடுமையான சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரளவிற்கு குறைவான விலையில் 7 பேர் பயணிக்க கூடிய ஒரு காரை நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தால், சிட்ரோன் சி3 காரின் அடிப்படையில் உருவாகும் 7 சீட்டர் காருக்காக காத்திருக்கலாம்.
சி3 காரின் 7 சீட்டர் மாடல் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் சிட்ரோன் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சிட்ரோன் சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இசி3 (eC3) என்ற பெயரில் விற்பனை செய்யப்படவுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் கார் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றான டாடா டியாகோ எலெக்ட்ரிக் (Tata Tiago EV) போன்ற கார்களுடன் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். இந்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்திற்கு பிறகு, சிட்ரோன் சி3 காரின் 7 சீட்டர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். சிட்ரோன் நிறுவனத்திடம் இருந்து ஓரளவிற்கு குறைவான விலையில், 2 புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு வரவுள்ளதால் வாடிக்கையாளர்கள் உற்சாகமமைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








