டாடா வேற லெவல்! இந்தியாவில் லான்ச் ஆகவுள்ள சூப்பரான எலெக்ட்ரிக் கார்கள்! எல்லாத்தையும் வாங்கணும் போல இருக்கே!
இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதையடுத்து, இன்னும் ஏராளமான நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இதில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள முக்கியமான எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா கர்வ் (Tata Curvv)
இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள முக்கியமான எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்று. டாடா கர்வ் கூபே-ஸ்டைல் எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் வெகு சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா கர்வ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், வரும் 2024ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் 500 கிலோ மீட்டர்களாக இருக்கலாம்.

டாடா சியாரா எலெக்ட்ரிக் கார் (Tata Sierra EV)
2020 ஆட்டோ எக்ஸ்போவில், சியாரா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியது. டாடா சியாரா எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஒரு சில ஆண்டுகளில் டாடா சியாரா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் (Tata Altroz EV)
டாடா சியாரா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை போல், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரும், 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் வெகு விரைவிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நடப்பு 2022ம் ஆண்டிலேயே அல்ட்ராஸ் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் தொழில்நுட்ப விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஓரளவிற்கு விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியர்கள் எதிர்பார்க்கும் எலெக்ட்ரிக் கார்களில் முதன்மையான இடத்தில் உள்ளது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் தவிர, ஏற்கனவே விற்பனையில் உள்ள நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார் ஆகியவற்றின் லாங்-ரேஞ்ச் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரிய பேட்டரி பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது கிடைப்பதை காட்டிலும் அதிக ரேஞ்ச் கிடைக்கும்.

கியா இவி6 (Kia EV6)
இவி6 எலெக்ட்ரிக் கார் மூலமாக இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் கியா நிறுவனம் நடப்பாண்டு நுழையவுள்ளது. ஆம், இந்திய சந்தையில் கியா நிறுவனம் களமிறக்கவுள்ள முதல் எலெக்ட்ரிக் இதுதான். கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி வரும் மே மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளது.

அதே நேரத்தில் இவி6 எலெக்ட்ரிக் கார்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை கியா நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்டுதான் இந்த கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். எனவே விலை மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5)
ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை ஹூண்டாய் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதுவும் நடப்பாண்டிலேயே ஐயோனிக் 5 விற்பனைக்கு வரவுள்ளது. கியா இவி6 எலெக்ட்ரிக் காரை போலவே, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுதான் விற்பனை செய்யப்படும். எனவே இதன் விலையும் மிகவும் அதிகமாக இருக்கும்.

அத்துடன் ஏற்கனவே விற்பனையில் உள்ள கோனா எலெக்ட்ரிக் காரின் 2022 மாடலையும், ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வழங்கி வரும் கடுமையான போட்டியை சமாளிக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








