பொங்கலுக்கு செம விருந்து காத்திருக்கு! அடுத்த மாசம் புதிய கார்களின் அறிமுகம், வெளியீடுனு பட்டைய கிளப்ப போறாங்க
புத்தாண்டை முன்னிட்டு வாகன ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரும் 2023 ஜனவரியில் புதுமுக கார்கள் சிலவற்றை அறிமுகம் செய்ய மற்றும் வெளியீடு செய்ய காத்துக் கொண்டிருக்கின்றன. எஸ்யூவி, எம்பிவி, செடான் என பல தரப்பட்ட கார் மாடல்கள் இந்தியாவில் வரும் ஜனவரியை சிறப்பிக்கும் விதமாக அறிமுகமாக இருக்கின்றன.
இதில் ஒரு சிலவற்றின் விற்பனை அடுத்த மாதமே தொடங்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது. பொங்கலை முன்னிட்டு புதிய காரை வாங்க திட்டமிட்டு உள்ளவர்களுக்கு இது வர பிரசாதமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாருங்கள் அடுத்த மாதம் (2023 ஜனவரியில்) எந்தெந்த நிறுவனத்தின் என்னென்ன கார் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகத்தைக் காண இருக்கின்றன என்பது பற்றிய தகவலைக் காணலாம். விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 (Mahindra XUV400)
தற்போது சந்தையில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொம்டிருக்கும் கார் மாடல்களில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி 400-ம் ஒன்று. இது ஓர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காராகும். மஹிந்திராவின் முதல் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாக இது சந்தையை வந்தடைய இருக்கின்றது. இதை ஏற்கனவே நிறுவனம் இந்தியாவில் பொது பார்வைக்குக் கொண்டு வந்துவிட்டது. இந்த நிலையிலேயே இதனை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் அது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இதன் அதிகாரப்பூர்வ வருகை ஜனவரியில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், எந்த நாளில் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றிய துள்ளியமான தகவல்கள் இதுவரை மஹிந்திரா தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் இது பற்றிய தகவலை நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கலாம். அறிமுகம் செய்யப்படும் அந்த நாளிலேயே எலெக்ட்ரிக் காரின் விலை பற்றிய விபரமும் வெளியிடப்பட உள்ளது. எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரில் 39.4 kWh பேட்டரி பேக்கை நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 456 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில், 450 பிஎச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரே வழங்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross)
டொயோட்டா நிறுவனம் தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா கிரிஸ்டா கார் மாடைலைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பு வசதிகள் நிரம்பி தேர்வாக இந்த இன்னோவா ஹைகிராஸை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஏற்கனவே இந்த காரை டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது. மேலும், புக்கிங் பணிகளும் தொடங்கிவிட்டன. ஆனால், இதன் விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்த தகவலையே அடுத்த ஜனவரி மாதத்தில் நிறுவனம் வெளியிட இருக்கின்றது.
ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் மைல்டு ஹைபிரிட் என இரு விதமான ஹைபிரிட் தேர்வுகளில் இந்த காரை டொயோட்டா விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதன் ஸ்ட்ராங் ஹைபிரிட் வெர்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 21 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜ் தரும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் காரணத்தினாலேயே இந்த காருக்கு எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, விற்பனையில் இருக்கும் ஹைகிராஸ் காரை காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகள் மற்றும் இட வசதி உடன் இந்த கார் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் வெர்ஷன் (Citroen C3 EV)
இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் சிட்ரோன் சி3-யும் ஒன்று. இந்த கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனையே இந்தியாவில் விரைவில் கொண்டு வரும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. ஏற்கனவே இந்த காரின் இந்திய சோதனை ஓட்டம் தொடங்கிவிட்டது. அண்மையில்கூட சார்ஜிங் மையத்தில் இந்த கார் சார்ஜ் செய்யுகின்ற படங்கள் வெளியாகின. இந்த நிலையிலேயே இந்த மின்சார கார் வரும் 2023 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Hector facelift)
எம்ஜி நிறுவனம் தனது விற்பனையில் இருக்கும் கார் மாடலான ஹெக்டர் காரை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த புதுப்பித்தல் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே 2023 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியை அலங்கரிக்கும் விதமாக ஹெக்டர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனவரி 5 ஆம் தேதியிலேயே ஹெக்டர் அறிமுக நிகழ்வு நடைபெற இருக்கின்றது. புதுப்பித்தலின் அடிப்படையில் பன்முக புதிய அம்சங்களை இந்த காரில் எம்ஜி நிறுவனம் செய்திருக்கின்றது. அந்தவகையில், 14 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கணிசமான உடல் தோற்றம் மாற்றம் உள்ளிட்டவற்றுடன் புதுப்பிக்கப்பட்ட ஹெக்டர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது. ஆனால் எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5)
ஹூண்டாய் நிறுவனம் அதன் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றான ஐயோனிக் 5 மாடலை மிக சமீபத்திலேயே இந்திய சந்தையில் வெளியீடு செய்தது. இதன் விலை பற்றிய விபரங்கள் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளன. வரும் 2023 ஜனவரியிலேயே இதன் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கின்றது. கியா இவி6 எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டு வரும் அதே பிளாட்பாரத்தில் வைத்தே இந்த காரை ஹூண்டாய் கட்டமைத்துள்ளது. இது ஓர் அதிகம் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் காராகும். இதற்காக எலெக்ட்ரிக் கார் மாடலில் 72.6 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஓர் ஃபுல் சார்ஜில் 631 கிமீ வரை பயணிப்பதற்கான மின்சாரத்தை வழங்கும்.
பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஃபேஸ்லிஃப்ட் (X7 facelift) மற்றும் 3 சீரிஸ் எல்சிஐ (3 Series LCI)
பிஎம்டபிள்யூ நிறுவனம் வரும் ஜனவரி மாதத்தில் இரு புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. எக்ஸ்7 மற்றும் 3 சீரிஸ் எல்சிஐ ஆகிய இரு கார் மாடல்களையே நிறுவனம் களமிறக்க உள்ளது. இதில் எக்ஸ்7 கார் மாடலை மைல்டு ஹைபிரிட் வசதிக் கொண்ட 4.4 லிட்டர் வி8 மோட்டாருடனும், 3 சீரிஸ் எல்சிஐ மாடலை 48 வோல்டு மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சொகுசு வசதிகள் நிரம்பிய வாகனமாக இந்த இரண்டும் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
பிஎம்டபிள்யூ ஐ7 (i7) மற்றும் 7 சீரிஸ் (7 Series)
பிஎம்டபிள்யூ நிறுவனம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தை வேற லெவலில் வரவேற்க இருக்கின்றது. இதை உறுதி செய்யும் விதமாக நிறுவனத்தின் இந்த இரு தயாரிப்புகள் இருக்கின்றன. ஏற்கனவே வரும் ஜனவரியிலேயே எக்ஸ் 7 மற்றும் 3 சீரிஸ் எல்சிஐ களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த மாதத்திலேயே ஐ7 மற்றும் 7 சீரிஸ் ஆகிய கார் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில், ஐ7 சீரிஸ் என்பது எலெக்ட்ரிக் செடான் ரக காராகும். இதில், அதிக ரேஞ்ஜை வழங்குவதற்காக 101.7 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தி இருக்கின்றது.
இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 512 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். 7 சீரிஸின் அடுத்த தலைமுறை வெர்ஷனே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த காரில் பன்முக சிறப்பு வசதிகளை பிஎம்டபிள்யூ சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், 14.9 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 31 அங்குல 8கே ரூஃப் மவுண்டட் தியேட்டர் போன்ற அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இவ்விரு கார் மடால்களும் மும்பையில் நடைபெற இருக்கும் ஜாய்டவுன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








