இனி க்ரெட்டா, செல்டோஸ் ஓரம்தான் போகனும்... இணையத்தில் கசிந்த புதிய மாருதி விட்டாராவின் விலை!!
மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய விட்டாரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலை குறித்த விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் மூலம் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் முன்னிலை வகித்துவந்த மாருதி சுஸுகி நிறுவனத்தால் ஏனோ காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் கோலோச்ச முடியவில்லை. காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து சந்தைப்படுத்தப்படும் எஸ்-கிராஸ் கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை வெறும் 697 ஆகும்.

சிறந்த காம்பெக்ட் எஸ்யூவி காராக விளங்கும் ஹூண்டாய் க்ரெட்டாவின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 13,790. இதில் இருந்து காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் எந்த அளவிற்கு மாருதி சுஸுகி பின்தங்கி உள்ளது என்பதை பார்த்து கொள்ளுங்கள். இதனை சரிச்செய்யும் விதமாகவே எஸ்-கிராஸ் மாடலுக்கு மாற்றாக விட்டாரா என்ற பெயரில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது.

விட்டாரா பிரெஸ்ஸா என்ற பெயரை முன்பு தனது சப்-காம்பெக்ட் எஸ்யூவி காருக்காக இந்த நிறுவனம் பயன்படுத்தி வந்தது. ஆனால் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா மாடல் ஆனது வெறும் 'பிரெஸ்ஸா' என்கிற பெயரில் கடந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மீதியிருக்கும் விட்டாரா பெயரை தனது புதிய காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு பயன்படுத்தி கொள்ள மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில்தான் புதிய விட்டாரா எஸ்யூவி மாடலின் விலைகள் குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப் மையங்களிலும், இணையத்தள பக்கத்திலும் விட்டாரா காருக்கான முன்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இணையத்தள பக்கத்தின் மூலாதர கோட்-ஐ ஆராய்ந்து பார்த்ததில், ரூ.9.95 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் புதிய விட்டாரா காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது தெரியவந்துள்ளது.

ஆனால் இது புதிய விட்டாரா மாடலின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையா அல்லது மத்திய-நிலை வேரியண்ட்டின் விலையா என்பது தெரியவில்லை. எங்களை கேட்டால், இது விட்டாராவின் ஆரம்ப-நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையாகவே இருக்க வேண்டும். ஏனெனில் இதற்கு கீழான விலையில் விட்டாரா கார் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவே.

தற்போதைய நிலவரப்படி, ரூ.9.95 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் களமிறங்கினாலே ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற மற்ற பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களை காட்டிலும் குறைந்த விலையிலானதாக புதிய மாருதி விட்டாரா விளங்கும். புதிய விட்டாரா காம்பெக்ட் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை அடுத்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.

இதற்கிடையில் புதிய விட்டாரா கார் தொடர்பான டீசர்களை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த டீசரில் ஆல்க்ரிப் (ALLGRIP) வேரியண்ட்டிலும் புதிய மாருதி விட்டாரா கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த வகையில், ஆல்க்ரிப் முத்திரையுடன் வெளிவரும் முதல் மாருதி காராக புதிய விட்டாரா விளங்கவுள்ளது. 'ஆல்க்ரிப்' முத்திரை ஆனது அனைத்து-சக்கர-ட்ரைவ் திறனுடன் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சுஸுகி கார்களில் மட்டுமே இதுவரையில் வழங்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் ஜப்பான் உள்பட சர்வதேச சந்தைகளில் சுஸுகி விட்டாராவில் வழங்கப்படும் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பை இந்தியாவிற்கான புதிய விட்டாரா காம்பெக்ட் எஸ்யூவி காரிலும் எதிர்பார்க்கலாம்.

என்ஜின் தேர்வுகளாக, சமீபத்திய பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் எக்ஸ்.எல்6 கார்களில் வழங்கப்படும் அதே 1.5 லிட்டர் கே15சி இரட்டை ஜெட், இரட்டை விவிடி பெட்ரோல் என்ஜின் புதிய விட்டாராவில் வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 102 பிஎச்பி மற்றும் 136.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் டொயோட்டா பிராண்டில் இருந்து சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்ட ஹைரைடர் நடுத்தர-அளவு எஸ்யூவி காரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒற்றை எலக்ட்ரிக் மோட்டார் உடனான 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜினும் புதிய விட்டாரா மாடலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








