இந்தியாவில் ஸ்கோடா ஷோரூம்களை அலங்கரிக்க தொடங்கிய ஸ்லாவியா கார்... சீக்கிரம் விலையை சொல்லுங்கப்பா!
இந்தியாவில் உள்ள ஸ்கோடா ஷோரூம்களை ஸ்லாவியா கார் அலங்கரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia). இது செடான் ரக கார் ஆகும். ஸ்கோடா நிறுவனம் செடான் கார்களை தயாரிப்பதற்கு பெயர் பெற்றது. இதன் காரணமாக ஸ்கோடா ஸ்லாவியா மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

ஸ்கோடா நிறுவனம் ஸ்லாவியா காரின் டெஸ்ட் டிரைவ்வை நடப்பு பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தியாவில் உள்ள ஒரு சில ஷோரூம்களில் இந்த கார் தற்போது காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஷோரூம்களில் தற்போது ஸ்லாவியா காரை பற்றிய வாடிக்கையாளர்களின் விசாரணைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே ஸ்லாவியா காரின் விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும் என ஸ்கோடா நிறுவனம் எதிர்பார்க்கிறது. முன்னதாக இந்தியாவில் ஸ்கோடா ஸ்லாவியா காரின் டெலிவரி தொடர்பான தகவல்களை, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனர் ஜேக் ஹோலிஸ் வெளியிட்டிருந்தார்.

சமூக வலை தள பதிவின் மூலமாக இந்த தகவல் வெளியிடப்பட்டிருந்தது. ஜேக் ஹோலிஸ் தெரிவித்துள்ள தகவல்களின்படி பார்த்தால், ஸ்கோடா ஸ்லாவியா காரின் டெலிவரி பணிகள் வரும் மார்ச் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஸ்கோடா ரேபிட் (Skoda Rapid) காருக்கு மாற்றாக ஸ்லாவியா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள சஹான் பகுதியில் ஸ்கோடா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்குதான் ஸ்கோடா ஸ்லாவியா கார் உற்பத்தி செய்யப்படுகிறது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் உற்பத்தி பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஸ்கோடா ரேபிட் காரை காட்டிலும் ஸ்கோடா ஸ்லாவியா கார் பெரியது. MQB-A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில் ஸ்கோடா ஸ்லாவியா கார் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருந்து வரும் ஸ்கோடா குஷாக் காரிலும் இதே பிளாட்பார்ம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

பிளாட்பார்ம் மட்டுமல்லாது, ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பவர்ட்ரெயின் தேர்வுகள்தான் ஸ்கோடா ஸ்லாவியா காரிலும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி ஸ்கோடா ஸ்லாவியா காரில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

இதில், 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. ஸ்கோடா ஸ்லாவியா காரில் டீசல் இன்ஜின் தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோடா குஷாக் காரை போலவே, ஸ்கோடா ஸ்லாவியா காரின் இரண்டு இன்ஜின் தேர்வுகளுடனும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் 1.0 லிட்டர் இன்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வும், 1.5 லிட்டர் இன்ஜினுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படவுள்ளது.

ஸ்கோடா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் தனது விற்பனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக களமிறக்கப்பட்ட ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போன்ற மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டின் ஜாம்பவான்களுடன் ஸ்கோடா குஷாக் போட்டியிட்டு வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக ஸ்லாவியா செடான் காரை ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த காரும் ஸ்கோடா நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், விலை நிர்ணயம் சரியாக இருந்தால், ஸ்கோடா ஸ்லாவியா சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.


Click it and Unblock the Notifications








