இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கே!
இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார் ஆகியவற்றுக்கு கிடைத்து பெரும் வரவேற்பு காரணமாக, இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் தற்போது முதலிடத்தில் உள்ளது. இந்த பெருமையை தக்க வைத்து கொள்ள, நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதில், முக்கியமான 5 எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த 5 எலெக்ட்ரிக் கார்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் லாங்-ரேஞ்ச்
ஏற்கனவே விற்பனையில் உள்ள நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் மேம்படுத்தி வருகிறது. வெகு விரைவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய மாடல் இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

2022 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், பெரிய பேட்டரி தொகுப்பு, பின் சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், அதிக சக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், ஏர் ப்யூரிஃபையர், க்ரூஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தற்போது விற்பனையில் உள்ள 30.2 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ள மாடலும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பெரிய பேட்டரி தொகுப்பு, புதிய வசதிகள் உள்ளிட்ட காரணங்களால் தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், புதிய மாடலின் விலை அதிகமாக இருக்கும்.

டாடா டிகோர் எலெக்ட்ரிக் லாங்-ரேஞ்ச்
நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷனை போல், ஏற்கனவே விற்பனையில் உள்ள டிகோர் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார், சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, சமீபத்தில் கேமராவின் கண்களில் சிக்கியது.

அப்போது டிசைன் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக முழுமையாக உருமறைப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனால் உட்புறத்திலும், வெளியேயும் சிறிய அளவில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகி வரும் தகவல்கள் உண்மை என்றால், தற்போது விற்பனையில் உள்ள மாடலில் பொருத்தப்பட்டிருப்பதை காட்டிலும், 2022 டிகோர் எலெக்ட்ரிக் காரில் பெரிய பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டிருக்கும். இதன் காரணமாக டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் அதிகமாக இருக்கும்.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார்
கிட்டத்தட்ட தயாரிப்பிற்கு தயார் நிலையில், 2020 ஆட்டோ எக்ஸ்போவில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி இன்னும் தொடங்கப்படவில்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் செக்மெண்ட்டில் சுறுசுறுப்பாக செயல்பட முடிவு செய்துள்ளது.

எனவே டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் டிரைவிங் ரேஞ்ச் 250 கிலோ மீட்டர்கள் முதல் 300 கிலோ மீட்டர்களாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது வரவுகளில் ஒன்று பன்ச். இந்த ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் 250 முதல் 300 கிலோ மீட்டர்களாக இருக்கலாம். இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

டாடா கர்வ் எலெக்ட்ரிக் கார்
டாடா கர்வ் கான்செப்ட் வெகு சமீபத்தில்தான் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இது கூபே ஸ்டைல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக விற்பனைக்கு வரவுள்ளது. டாடா கர்வ் முதலில் எலெக்ட்ரிக் காராகதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதை தொடர்ந்து ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

டாடா கர்வ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 500 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த எலெக்ட்ரிக் கார் வரும் 2024ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








