அரசு வைக்கும் செக்! பெட்ரோல், டீசல் வண்டிலாம் இனி அவ்ளோதான்! கதையை முடித்து கட்ட வரும் எலெக்ட்ரிக் கார்கள்!
இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள மிக முக்கியமான எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ள வெற்றி, மற்ற முன்னணி கார் நிறுவனங்களையும் புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தூண்டியுள்ளது.

எனவே இந்திய சந்தையில் விற்பனைக்கு வருவதற்கு பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் தயாராகி வருகின்றன. இதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக முக்கியமான எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். செய்திக்குள் செல்லலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400)
மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் சமீபத்தில்தான் இந்திய சந்தையில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் காரின் அதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரையும் மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருடன் ஒப்பிடும்போது, மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் நீளமானது. இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் 39.5 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 456 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் (MG ZS EV) ஆகியவற்றுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க முடியும்.

அதே நேரத்தில் இந்த காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் விலையை வரும் ஜனவரி மாதம் அறிவிக்கவுள்ளதாக மஹிந்திரா ஏற்கனவே தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் (Citroen C3 EV)
இந்திய சந்தையில் சிட்ரோன் சி3 ஐசி இன்ஜின் கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனம் விற்பனை செய்யும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஆகும். இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருடன் சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் நேரடியாக போட்டியிடும். தற்போதைய நிலையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார்தான் இந்தியாவின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஆகும். எனவே சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் காரும் மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் (Tata Altroz EV)
டியாகோ எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்தை தொடர்ந்து, ஏற்கனவே விற்பனையில் உள்ள அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு விரைவிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிப்ட்ரான் தொழில்நுட்பத்தின் (Ziptron Technology) அடிப்படையில் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்படலாம்.

இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு மேலாக டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் நிலை நிறுத்தப்படும். தற்போது விற்பனையில் உள்ள அல்ட்ராஸ் ஐசி இன்ஜின் கார் குளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கி, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. எனவே இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV)
அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காருக்கு அடுத்தபடியாக, ஏற்கனவே விற்பனையில் உள்ள பன்ச் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இந்த காரிலும் ஜிப்ட்ரான் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா நிறுவனம் அதன் ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்வதற்கு இந்த புதிய மாடல்கள் உதவலாம்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் புரட்சி தொடங்கி விட்டது. பல்வேறு புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் வரிசையாக சந்தையில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்க கூடிய வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது செல்வாக்கை இழந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாலும், கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பதாலும் மத்திய, மாநில அரசுகளும் கூட தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களை விரும்புவதில்லை. மாறாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அவை ஊக்குவித்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








