இன்னும் அசத்தலான காராக மாறிய லம்போர்கினி உருஸ்! காசு கையில இல்ல, இருந்தா எல்லாரும் இந்த காரதான் வாங்குவாங்க!
லம்போர்கினி நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட உருஸ் பெர்ஃபார்மென்டே எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இந்த காரின் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய விரிவான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
லம்போர்கினி நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட உருஸ் பெர்ஃபார்மென்டே எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. உலகின் சூப்பர் ஃபாஸ்ட் எஸ்யூவி ரக கார்களில் உருஸ்-ம் ஒன்று. இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, இந்திய திரை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் மத்தியில் உருஸ் எஸ்யூவிக்கு மிக மிக அமோகமான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய ஓர் பிரபலமான கார் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனையே உருஸ் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. தற்போதுக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் இந்த சம்பவத்தை நிறுவனம் நிகழ்த்தியிருக்கின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடல் இந்தியாவில் ரூ. 4.22 கோடிக்கு விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
முழுக்க முழுக்க செல்வந்தர்களையும், தொழிலதிபர்களையும் மையமாகக் கொண்டே இந்த வாகனத்தை லம்போர்கினி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும், அவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டே பல்வேறு சிறப்பு வசதிகளை புதிதாக இந்த அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனில் லம்போர்கினி சேர்த்திருக்கின்றது. இதுதவிர ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சில அம்சங்களை புதுப்பித்தும், மறு வடிவமைப்பு செய்தும் நிறுவனம் உருஸ் பெர்ஃபார்மென்டே காரில் பயன்படுத்தியிருக்கின்றது.

அந்தவகையில், காரின் முன் பக்க பம்பர், கார்பன் ஃபைபர் ஸ்பிளிட்டர், பிளாக்-அவுட் ஏர் இன்டேக் உள்ளிட்டவற்றை நிறுவனம் மறு வடிவமைப்புச் செய்து பயன்படுத்தியிருக்கின்றது. இந்த அம்சங்கள் ஏற்கனவே கவர்ச்சியானதாக காட்சியளித்த உருஸ் காரை மேலும் கவர்ச்சியானதாக மாற்றியிருக்கின்றது என்று கூறலாம். இதுமட்டுமின்றி காரின் முன் மற்றும் பின்பக்கத்தின் அகலாம் லேசாக உயர்த்தப்பட்டுள்ளது. 16 மிமீ வரை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, காரின் உயரத்தைக் கணிசமாக குறைக்கும் நடவடிக்கையையும் லம்போர்கினி மேற்கொண்டிருக்கின்றது.
இதன்படி, சவாரி உயரம் 20 மி.மீட்டராக., குறைக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி விருப்ப தேர்வாக வழங்கப்படும் 23 அங்குல அலாய் வீலின் ஸ்டைலிலும் நிறுவனம் மறு வடிவமைப்பு பணியை மேற்கொண்டிருக்கின்றது. இந்த வேலைகள் அனைத்தும் காரின் வெளிப்புறத் தோற்றத்தைக் கூடுதல் கவர்ச்சியானதாக மாற்றும் வகையில் செய்யப்பட்டிருக்கின்றன. இத்துடன், காரின் ஏரோடைனமிக்ஸ் சிஸ்டத்தையும் கணிசமாக மேம்படுத்தியிருக்கின்றது லம்போர்கினி. இதன் அடிப்படையில் உருஸ் பெர்ஃபார்மென்டேவில் புதிய ரியர் ஸ்பாய்ளர், ஏர் கர்டைன்ஸ் மற்றும் பான்னெட் அவுட்லெட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இது காரின் திறன் வெளிப்பாட்டை 38 சதவீதம் வரை உயர்த்தியிருக்கின்றது. இத்துடன், 10 சதவீதம் ஏரோடைனமிக் எஃபீசியன்சியும் அதிகரித்துள்ளது. இது மட்டுமில்லைங்க காரின் எஞ்ஜினை கூல் செய்வதற்கும், மிக சிறந்த பிரேக்கிங்கிற்கும் இந்த புதிய அம்சங்கள் உதவியாக இருக்கும். காரின் வெளிப்புறத்தைப் போலவே உட்பக்கமும் மிக சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், காரின் உட்பக்கத்தை கூடுதல் பிரீமியமானதாக மாற்றும் விதமாக கருப்பு நிற அல்கான்ட்ரா பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேலையில், விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு லெதர் ஆப்ஷனையும் லம்போர்கினி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. லம்போர்கினி நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட உருஸ் பெர்ஃபார்மென்டே எஸ்யூவி காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 666 எச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த திறனே உலகின் தலை சிறந்த திறனை வெளியேற்றக் கூடிய காராக லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரை உருவாக்கியிருக்கின்றது.
இந்த காரின் ஆக்சலரேஷன் திறன் மேம்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகையால், முன்பைக் காட்டிலும் பல மடங்கு சூப்பராக இந்த அம்சம் வேலை செய்யும் வகையில் இருக்கின்றது. இத்தகைய சூப்பரான வசதிகள் கொண்ட லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மென்டே காரே இந்தியாவில் தற்போது விற்பனைக்கு களமிறக்கப்பட்டிருக்கின்றது. இந்த காருக்கு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருப்பதை போலவே உலக சந்தையிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









